பழமை வாய்ந்த வைரவர் வடிவிலான சிலையை விற்பனை செய்ய முயன்ற இருவர் வவுனியா பிராந்திய போதைத்தடுப்பு பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய வவுனியா நெளுக்குளம் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் முச்சக்கர வண்டி ஒன்றை வழிமறித்து சோதனை செய்தனர்.

இதன்போது பெறுமதி வாய்ந்த வைரவர் சிலை ஒன்றினை மீட்டதுடன், குறித்த முச்சக்கர வண்டியில் பயணித்த வவுனியாவை சேர்ந்த 25,26 வயதுடைய இரண்டு இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் குறித்த சிலையினை விற்பனை செய்யும் நோக்கத்தில் வந்திருக்கலாம் என பொலிஸாரால் சந்தேகிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.