(எம்.மனோசித்ரா)

நாட்டில் நாளாந்தம் இனங்காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அண்மையில் கணிசமானளவு வீழ்ச்சியை அவதானிக்க முடிந்த போதிலும், தற்போது மீண்டும் தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்த போக்கினைக் காண்பிக்கிறது. குறிப்பாக சிறுவர்கள் தொற்றுக்கு உள்ளாகும் வீதம் அதிகரித்துள்ளதாக சுகாதார தரப்புக்கள் தெரிவித்துள்ளன. 

கடந்த ஒரு வாரத்தில் கொழும்பு - சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் மாத்திரம் 61 சிறுவர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவர்களில் நால்வர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சிறுவர்கள் அதிகளவில் தொற்றுக்கு உள்ளாகின்றமை தொடர்பில் கொழும்பு சீடாட்டி வைத்தியசாலையின் விசேட வைத்தியர் வாசன் ரட்ணசிங்கத்திடம் வினவிய போது ,

நாட்டில் நாளாந்தம் கொவிட் தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கையில் கணிசமானளவு அதிகரிப்பை அவதானிக்க முடிகிறது.

கடந்த 19 ஆம் திகதி 10 சிறுவர்களுக்கும் , 20 ஆம் திகதி 10 சிறுவர்களுக்கும் , 21 ஆம் திகதி 6 சிறுவர்களுக்கும் , 22 ஆம் திகதி 6 சிறுவர்களுக்கும் , 23 ஆம் திகதி 6 சிறுவர்களுக்கும் , 24 ஆம் திகதி 14 சிறுவர்களுக்கும் , 25 ஆம் திகதி 9 சிறுவர்களுக்கும் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 4 - 14 வயதுக்கு இடைப்பட்டோராவர்.

சிறுவர்கள் மாத்திரமின்றி அவர்களது பெற்றோரில் தாய் அல்லது தந்தை ஆகியோருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படும் வீதம் அதிகரித்துள்ளது.

கடந்த வாரத்தில் சீமாட்டி வைத்தியசாலைக்கு தமது குழந்தைகளை சிகிச்சைக்காக அழைந்து வந்த பெற்றோருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 18 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சீமாட்டி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் சகல சிறுவர்களுக்கும் அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்படும். இதன் போது பெற்றுக் கொள்ளப்படும் மாதிரிகளில் சந்தேகத்திற்கிடமானவை பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.

அவற்றிலேயே மேற்கூறியவாறு 61 சிறார்களுக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இது வேறு நோய்க்காக சிகிச்சை பெறுவதற்கு வருபவர்களில் தெரிவு செய்யப்பட்டு எடுக்கப்படும் பரிசோதனைகளின் முடிவாகும்.

அவ்வாறெனில் சமூகத்தில் இன்னும் இனங்காணப்படாத தொற்றாளர் அதிகளவில் காணப்படுகிறார் என்பது ஸ்திரமாகும். வழமையை விட சிறுவர்கள் தொற்றுக்கு உள்ளாகும் வீதம் அதிகமாகக் காணப்படுவதால் பெற்றோர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டார்.