செப்ெடம்பர் 08 ஆம் திகதியை சர்வதேச எழுத்தறிவு தினமாக அனுஷ்டிக்க வேண்டுமென 1965 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆறாம் திகதி “யுனெஸ்கோ” பிரகடனப்படுத்தியது. முதலாவது எழுத்தறிவு தினம் 1966 ஆம் ஆண்டு அனுஷ்டிக்கப்பட்டது. எழுத்தறிவு தினத்தின் அரைநூற்றாண்டு நிறைவை இவ்வாண்டு (2016) எழுத்தறிவு தினம் குறிக்கின்றது.
தனி மனிதர்களுக்கும் சமூகங்களுக்கும் எழுத்தறிவின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் இத்தினத்தின் நோக்கம்.
உலக நாடுகளின் கல்வி அமைச்சர்கள் கலந்து கொள்ளும் இவ்வாண்டுக்கான பிரதான நிகழ்வினை பிரான்சின் பாரிஸ் நகரில் “யுனெஸ்கோ” ஒழுங்கு செய்துள்ளது. கடந்த ஆண்டுகளைப் போலவே இவ்வாண்டும் எழுத்தறிவு விருதுகளும் வழங்கப்படவுள்ளன.
எழுத்தறிவு என்பது பாரம்பரியமாக வாசிப்பு, எழுத்து மற்றும் கணிதம் ஆகிய திறன்களைக் குறிப்பதாக இருந்து வந்தது. இன்று அதன் வரைவிலக்கணம் விரிவடைந்துள்ளது. இன்று அது மொழி, கணிதம் குறியீடுகள், கணினி ஆகியவற்றில் திறன் பெற்றிருப்பதையும் மற்றும் புரிந்து கொள்ளுதல், தொடர்பாடல், பயன்தரும் அறிவினைப் பெற்றுக் கொள்ளுதல் மற்றும் ஐதீகமான கலாசாரக் குறியீடுகளை பயன்படுத்துதல் ஆகியவற்றையும் குறிக்கின்றது.
எழுத்தறிவை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் மிலேனிய அபிவிருத்தி இலக்குகள் மற்றும் பல்வேறு சர்வதேச, தேசிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்த போதி லும் இன்றளவும் சர்வதேச சமூகத்தின் மிகப் பெரிய சவால்களிலொன்றாக எழுத்தறிவின்மை இருந்து வருகின்றது. “யுனெஸ்கோ”வினால் வெளியிடப்பட்ட மிக சமீபத்திய தகவலின்படி உலகில் எழுத்தறிவற்றோரின் தொகை ஒரு பில்லியனாகும். உலக சனத்தொகையில் இது 26%. இதில் மூன்றிலிரு பங்கினர் பெண்கள். 98% ஆன எழுத்தறிவற்றோர் வளர்முக நாடுகளிலேயே உள்ளனர்.
குழந்தைகள் – மாணவரிடையே
எழுத்தறிவு
குழந்தைகள் – மாணவரிடையே எழுத்தறிவை வளர்ப்பதற்கான பெருமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளிலிருந்து அரிய தகவல்கள் தெரியவந்துள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
ஒரு குழந்தை வாசிக்கத் தொடங்குமுன் அக்குழந்தை ஆயிரம் கதைகளையாவது கேட்டிருக்க வேண்டும். வீட்டில் புத்தகங்கள் இருப்பது தந்தையின் கல்வித்தரத்தைப் போல் இரு மடங்கு முக்கியமானதாகும். குறைவான எழுத்தறிவுடைய பெற்றோர்களின் குழந்தைகள் வாசிப்பில் மோசமாக இருப்பதற்கு 72% ஆன வாய்ப்பு இருக்கின்றது.
ஐந்து முதல் ஆறு வயதினரான குழந்தைகள் 2,500 முதல் 5,000 சொற்கள் வரை தெரிந்து வைத்திருத்தல் வேண்டும்.
2008 ஆம் ஆண்டு ஆய்வொன்றின் படி உலகெங்குமுள்ள கல்லூரி மாணவர்களில் மூன்றில் ஒருவர் ஒவ்வோராண்டும் பாடசாலையிலிருந்து இடைவிலகிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த இடைக்காலத்தில் இந்த வீதம் குறைந்திருக்கின்றதா? என்பது தெரியவில்லை.
இரண்டாம் தரத்தில் ஒழுங்காக வாசிக்க முடியாத ஒரு குழந்தைக்கு தனது ஆரம்பக் கல்வியை நிறைவு செய்வதற்கு நான்கில் ஒரு வீதமான வாய்ப்பே இருக்கின்றது.
வளர்ச்சியடைந்த சில நாடுகளின் நிலை
நான்காம் வகுப்பில் திறமையாக வாசிக்க முடியாதோரில் கணிசமானோர் சீர்திருத்தப்பள்ளிகளையோ, சிறைச்சாலைகளையோ சென்றடைகிறார்கள் என்று அமெரிக்க ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. அமெரிக்க சிறைக்கைதிகளில் 70% ஆனோர் நான்காம் தரத்திற்குரிய வாசிப்புத் திறனையே உடையவர்களாய் இருக்கின்றனர். 50% ஆன அமெரிக்கர்கள் எட்டாந்தரத்திற்குரிய புத்தகங்களை வாசிக்க முடியாதவர்களாகவேயிருக்கின்றார்கள். எழுத்தறிவின் சர்வதேச மட்டத்தில் அமெரிக்கா 28 ஆம் இடத்தில் இருக்கின்றது.
2014 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றிலிருந்து இங்கிலாந்தில் 11 வயதுடைய குழந்தைகளில் ஐந்தில் ஒருவர் திறமையாக வாசிக்க முடியாதவராயிருக்கின்றார் எனத் தெரியவருகின்றது.
கனடாவில் 42% ஆனோர் அரை எழுத்தறிவுடையவர்களாகவே கணிக்கப்பட்டிருக்கின்றார்கள். அது மாத்திரமின்றி, கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக அந்நாட்டு எழுத்தறிவு வீதத்தில் பெரிதான மாற்றங்களேதும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
சில ஆசிய நாடுகளின் நிலை
ஆசியாவிலேயே மிக மோசமான எழுத்தறிவு வீதம் இந்தியாவுக்குரியது. எழுத்தறிவற்றோரின் தொகை 287 மில்லியன். இதிலும் பெண்களின் தொகையே அதிகமாகும். உலக எழுத்தறிவற்றோர் தொகையில் இது 37% என “ஒக்ஸ்பாம் (OXFAM)” நிறுவனத்தகவல் தெரிவிக்கின்றது. ஏற்றத் தாழ்வான சமூக, பொருளாதார வளர்ச்சி மற்றும் பாரம்பரிய பழக்க வழக்கங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியன இதற்குக் காரணமாகலாம். வல்லரசு நிலையில் வளர்ந்து வருவதாகச் சொல்லப்படும் இந்தியா எழுத்தறிவில் இந்த நிலையில் இருப்பது வியப்புக்குரியதுதான்.
ஆனால், அமெரிக்க மத்திய உளவுத்துறை முகவரமைப்பின் (சி.ஐ.ஏ.) தகவல்கள் படி இந்தியா உலக மட்டத்தில் 124 ஆவது இடத்திலும் பாகிஸ்தான் 144 ஆவது இடத்திலும் இருக்கின்றன.
சீனாவில் எழுத்தறிவை சற்று வித்தியாசமான முறையில் மதிப்பிடுகின்றார்கள். சீன எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒரு குறியீடாக அமைந்துள்ளன. இவ்வாறான குறியீடுகள் 1,500 ஐ கிராமப்புறத்தவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். நகர்ப்புறமாயின் அது 2,000 குறியீடுகள். அவ்வாறாயின் அவர் எழுத்தறிவுள்ளவர்.
சீனப்புரட்சிக்கு முன் 80% ஆனோர் எழுத்தறிவற்றவர்களாயிருந்தார்கள். இன்று 15 – 24 வயதுடையோரில் 99% ஆனோர் எழுத்தறிவுடையவர்களாயிருக்கின்றார்கள்.
இலங்கையின் எழுத்தறிவு வீதம் 92 ஆகும். ஆண்கள் 93%, பெண்கள் 91%. ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையிலான வித்தியாசம் 1.9%. சர்வதேச மட்டத்தில் 83 ஆவது இடத்தில் இருக்கின்றது. 82 ஆவது இடத்தில் மியன்மாரும் 84 ஆவது இடத்தில் கொஸோவாவும் உள்ளன. இலங்கையின் நிலை உலகச் சராசரியிலும் பிராந்திய சராசரியிலும் மேம்பட்டதாகும். இது குறித்து நாம் பெருமை கொள்ளலாம். உலகச் சராசரி 86% என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
வடகொரியாவுக்கு முதலிடம்
வடகொரியாதான் எழுத்தறிவில் உலகில் முதலாவது இடத்தில் உள்ளது. இரண்டாவது இடம் லட்வியாவுக்குத்தான். மூன்றாவது இடத்தை அஸர்பைஸ்தானும் கியூபாவும் பகிர்ந்து கொண்டுள்ளன. கடைசியான 160 ஆவது இடத்தில் உள்ளது நைகர் ஆகும்.
16 – 65 வயதினரிடையே மேற்கொள்ளப் பட்ட ஆய்வு ஒன்றிலிருந்து உடல்நலக் குறைவுடையோர் குறைவான எழுத்தறிவுடை யோராய் இருப்பது தெரியவந்துள்ளது.
எழுத்தறிவுடையோரை விட எழுத்தறி வற்றோர் குறைவாக வாக்களிப்போராய் உள்ளனர் என்பதும் சுவையான தகவலே.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM