-ஆர்.ராம்

இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 4 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளுக்கு செல்கிறார். 

அவர் தனது பயணத்தினை நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பித்திருக்கின்றார். 

இந்தப்பயணத்தில் இன்றையதினம் கார்கில் போர் வெற்றியின் 22ஆம் ஆண்டை முன்னிட்டு  தியாகங்கள் புரிந்த இந்திய படையினருக்கு லடாக்கிலுள்ள கார்கில் போர் நினைவகத்தில் ராம்நாத் கோவிந் மரியாதை செலுத்துகிறார்.

அதன் பின்னர் எதிர்வரும் 27ஆம் திகதி  ஸ்ரீநகரிலுள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 19ஆவது வருட பட்டமளிப்பு விழாவிலும் அவர் கலந்துகொள்ளவுள்ளார். 

அத்துடன் அங்கு முன்னெடுக்கப்பட்டுவரும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களையும் அவர் மேற்பார்வை செய்யவுள்ளார். 

1947ஆம் ஆண்டு, இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது, ஜம்மு-காஷ்மீர் தனிச்சையாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என அம்மாநிலத்தின் கடைசி மகாராஜாவாக இருந்த ராஜா ஹரி சிங் விரும்பினார். 

ஆனால் பின்னர் சில நிபந்தனைகளுக்கு பிறகு, இந்தியாவுடன் அம்மாநிலத்தை சேர்க்க ஒப்புக் கொண்டார். 

அந்த நேரத்தில்தான், இந்திய அரசமைப்பு சட்டத்தில், பிரிவு 370 இயற்றப்பட்டு, அதன் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.

அம்மாநிலத்தில் பாதுகாப்பு, வெளியுறவுத்துறை மற்றும் தகவல் தொடர்பு ஆகியவை குறித்து சட்டம் இயற்ற, பாராளுமன்றத்துக்கு உரிமை உள்ளது. ஆனால், அம்மாநிலத்துக்கென தனி அரசியலமைப்பு கோரப்பட்டது.

1951ஆம் ஆண்டில், ஜம்மு-காஷ்மீருக்கு என்று தனியே சட்டமன்றம் கூட்ட அனுமதி வழங்கப்பட்டது. நவம்பர் 1956 அன்று அம்மாநிலத்துக்கான அரசமைப்பு எழுதி முடிக்கப்பட்டு, 1957ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று சிறப்பு அந்தஸ்து அமுலுக்கு வந்தது.

பெரும்பான்மையுடன் இரண்டாவது தடவையாக ஆட்சியில் அமர்ந்த நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் மேற்படி விசேட ஏற்பாட்டை இரண்டு வருடங்களுக்கு முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் ஐந்தாம் திகதி நீக்கியிருந்தது. 

அத்துடன், இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்டதாக, காஷ்மீர், முற்போக்கான சட்டங்களான, 1954ஆம் ஆண்டின் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் (அட்டூழியங்களைத் தடுக்கும்) சட்டம், 214ஆம் ஆண்டின் முன்னெச்சரிக்கையாளர்கள் சட்டம், 1993ஆம் ஆண்டின் சஃபாய்க்கான தேசிய ஆணையம் கரம்சாரிஸ் சட்டம், 2007ஆம் ஆண்டின் வனவாசிகள் (வன உரிமைகளை அங்கீகரித்தல்) சட்டம்,  2009ஆம் ஆண்டின் சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையகச் சட்டம், மற்றும் குழந்தைகளுக்கான உரிமை இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் ஆகியன அமுலாக்கப்பட்டன. 

ஜம்மு-காஷ்மீருக்கான 370ஆவது பிரிவு நீக்கம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களும், சர்ச்சைகளும் காணப்படுகின்றன. 

ஆனால், குறித்த சிறப்பு சட்ட ஏற்பாடு நீக்கப்பட்டதன் பின்னர் அதாவது மத்தியின் ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்டதன் பின்னர் ஜம்மு-காஷ்மீரில் காணப்படும் அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு ஆகியன வலுவான நிலையை அடைந்திருப்பதாக இந்திய மத்திய அரசாங்கம் கூறுகின்றது. 

எதிர்வரும் ஆகஸ்ட் ஐந்தாம் திகதியுடன் விசேட ஏற்பாடு நீக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவுக்கு வரவுள்ள நிலையில் அண்மைய காலங்களில் அவ்வாறான முன்னேற்றகரமான விடயங்கள் நடைபெற்றுள்ளனவா என்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. 

அதுமட்டுமன்றி அங்குள்ள தற்போதைய சவால்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டியதும் கட்டாயமாகின்றது.

 

பொருளாதாரம்

அந்தவகையில் முதலில் பொருளாதார விடயத்தினை எடுத்துக்கொண்டால், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மார்ச் 17ஆம் திகதியன்று  ஜம்மு-காஷ்மீருக்காக 108,621 கோடி ரூபா செலவுத் தொகை கொண்ட  வரவு செலவுத்திட்டத்தினை வெளியிட்டார்.

 

அதில் 39,817 கோடி ரூபா மூலதன செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. வருவாய் செலவினங்களுக்கு 68,804 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைவிட ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 37 சதவீதம் அபிவிருத்திக்கு செலவிடப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிந்தது. 

மேலும், ஜம்மு-காஷ்மீரில் இந்த நிதியானது மாவட்ட அபிவிருத்தி மேம்பாட்டு சபைகள் ஊடாக பயன்படுத்தப்படுவது முதற்தடவையாகும். அவ்வாறு பயன்படுத்தப்படுவதனால் அது நேரடியாக உட்கட்டமைப்பு அபிவிருத்திகளுக்கு வாய்ப்பாக அமைகின்றது. 

கடந்த ஜனவரி முதலாம் திகதி,  ஜம்மு-காஷ்மீரின் தோட்டத்துறை உற்பத்திகளை மேம்படுத்தும் நோக்கிலும் உலக சந்தையுடன் தொடர்புபடுத்தும் முகமாகவும் இந்தியாவின் வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. 

இந்த ஒப்பந்தமானது, ஜம்மு-காஷ்மீர் விவசாயிகளுக்கு 3 முதல் 4 மடங்கு வரை வருமானமீட்ட மேம்பட்ட நிலைமையை வழங்குவதோடு தோட்டத்துறை உற்பத்திகளை 5500 ஹெக்டேர் பரப்பளவிற்கு விரிவு படுத்தப்படுவதற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1700 கோடி ரூபா செலவு செய்யப்படவுள்ளது. 

அத்துடன், இந்த ஒப்பந்தத்தின் மூலமாக, விவசாய-உற்பத்தியாளர் சங்கங்கள் 20இற்கும் மேற்பட்டவை உருவாக்கப்பட்டுள்ளமையும் முக்கியமானதாகின்றது.

மேலும், களஞ்சியப்படுத்தல் வசதிகளும் விஸ்தரிக்கப்பட்டு பழங்கள் உள்ளிட்ட பொருட்களின் உறுதி செய்யப்பட்ட ஏற்றுமதிகள் இடம்பெற ஆரம்பித்துள்ளன. 

இதன் மூலம் உற்பத்தியாகும் செரி உள்ளிட்ட பழவகைகள் விசேடமாக டுபாய்க்கு நேரடியாகவே ஏற்றுமதி செய்யப்படுகின்றது. 

அதேநேரம், ஜம்மு-காஷ்மீர் மாநில அரசாங்கமானது, தனியார் விமானப்போக்குவரத்து துறையினருடன் மேற்கொண்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக நாட்டின் அனைத்துப்பாகங்களுக்கும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளன. 

விமான சேவைத் தரப்பினருடன் விவசாயத்துறை மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்றுமதி, இறக்குமதிகளை இலகுபடுத்தியிருக்கின்றது என்கிறார் அத்துறையின் செயலாளர் நவின் குமார் சவுத்ரி.

அரசியல்

370சட்ட ஏற்பாடு நீக்கப்பட்டதன் பின்னர் 2019 ஒக்டோபரில் ஜம்மு-காஷ்மீரின் தொகுதி அபிவிருத்தி சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. 

இதில் 1092 வேட்பாளர்கள் போட்டியிட்டிருந்ததோடு 98.3 சதவீமான வாக்களிப்பு இடம்பெற்று 310 தவிசாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர். 

இது ஜனநாயகத்தினை உறுதிப்படுத்தும் முதற்செயற்பாடாகவே பார்க்கப்படுகின்றது. 

இதற்கு அடுத்தபடியாக, மாவட்ட சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. இந்தத் தேர்தலுக்கு இடையூறுகள் ஏற்படலாம் என்ற அச்சத்துடனே முன்னெடுக்கப்பட்டது. 

எனினும் சுமூகமான முறையில் எட்டுக்கட்டங்களாக வகுக்கப்பட்ட வாக்களிப்பு இடம்பெற்றதோடு, 280 சபைகளில் 278 சபைகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

இதன்மூலமாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்புக்கள் மூலமாக ஜனநாயக முறையில் தடையின்றிய நிருவாகத்தினை முன்னெடுப்பதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 

அத்துடன், கடந்த ஜுனில் பிரதமர் மோடி தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டம் இடம்பெற்றிருந்தது. இதன்போது ஜம்மு-காஷ்மீரின் பிரதான கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்தார்கள். 

இந்தக் கலந்துரையாடலின் அடிப்படையில் ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் ஜனநாயகத்தினை நிறுவுவதற்கான முதற்கட்ட இணக்கம் ஏற்பட்டது. 

இதன்பலனாக, கடந்த ஆறாம் திகதி எல்லை நிர்ணயக் குழுவினருடன் ஆறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சந்திப்பை நடத்தினார்கள். தமது முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தார்கள். 

அத்துடன் மேலதிகமாக எல்லை நிர்ணயம் தொடர்பான பரிந்துரைகளையும் குழு எதிர்பார்த்துக்கொண்டுள்ளது. எல்லை நிர்ணயம் நிறைவுக்கு வந்ததும் தேர்தல்கள் ஆணையகம் தேர்தல் திகதியை அறிவிக்கும். 

ஜம்மு-காஷ்மீர் மக்கள் தம்மை ஆளப்போகும் பிரதிநிதிகளை ஜனநாயக முறையில் தெரிவு செய்யவுள்ளார்கள்.

பாதுகாப்பு

ஜம்மு-காஷ்மீரில் பிரிவு 370 இரத்து செய்வதற்கு முன்பான  2018 ஜூன் 29 முதல் 2019 ஆகஸ்ட் 4 வரையான  402 நாட்களில் , 455 பயங்கரவாத சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 

பிரிவு இரத்துச் செய்யப்பட்ட 2019 ஆகஸ்ட் 5 முதல் 2020 செப்டம்பர் 9 வரையிலான 402 நாட்களில் யூனியன் பிரதேசத்தில் 211 பயங்கரவாத சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. 

அதுமட்டுமன்றி பிரிவு 370 இரத்துச் செய்யப்பட்டதன் பின்னர் ஜம்மு-காஷ்மீர் இளைஞர்கள் பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புபடுதல், பங்கேற்றல் உள்ளிட்ட செயற்பாடுகள் 40 சதவீதமான அளவு குறைந்துள்ளது. 

குறிப்பாக கூறுவதானால் காஷ்மீர் பள்ளத்தாக்கல் 67 இளைஞர்கள் பயங்கரவாத அமைப்புக்களுடன் இணைந்து துப்பாக்கி ஏந்தியதே அதியுச்ச சம்பவமாக காணப்படுகின்றது. 

இதேவேளை, பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில், பிரிவு 370 நீக்கப்பட்டதன் பின்னர் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் வெகுவாக குறைந்து விட்டது. 

காஷ்மீர் எல்லையில் கூட 36 சதவீதமான அளவிற்கு பயங்கரவாதச் செயற்பாடுகள் குறைந்து விட்டன என்று குறிப்பிட்டுள்ளது.

2019 ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை 15, வரை 188 பயங்காரவாதச் சம்பவங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இடம்பெற்றுள்ளன. 

இந்த எண்ணிக்கையானது 120ஆக குறைவடைந்ததோடு 2019இல் 136 பயங்கரவாதிகள் இருந்ததாகவும் அவர்களில் 2020ஆம் ஆண்டில், 126பேர் கொல்லப்பட்டதாகவும் பாதுகாப்பு தரப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டில் காஷ்மீரில் மொத்தமாக 110 உள்ளூர் பயங்கரவாதிகள் கொல்லப்படதோடு இதுவரை, ஹிஸ்புல் முஜாஹிதீனில் இருந்து 50 க்கும் மேற்பட்டவர்களும் மற்றும் லஷ்கர்-இ-தைபா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புக்களில் தலா 20 பேரும் ஐ.எஸ்.ஜே.கே மற்றும் அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் ஆகிய அமைப்புக்களின் குறைந்தது 14 பேரும் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவிக்கின்றன. 

2020 ஜனவரி முதல் ஜூலை 30 வரையில் காஷ்மீர் பள்ளத்தாக்கில், 148 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஜூன் மாதத்தில் மட்டும் 48 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஹிஸ்புல் தளபதி ரியாஸ், லஷ்கர் தளபதி ஹைதர், ஜெய்ஷ் தளபதி கரி யாசிர் மற்றும் அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் புர்ஹான் கோகா போன்ற பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட்டதோடு 22 பயங்கரவாத மறைவிடங்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. 

நிருவாகமும்  எதிர்பார்ப்பும்

ஜம்மு-காஷ்மீரின் நிருவாகம் தற்போது ஆளுரின் கையில் உள்ளது. அதன் ஆளுநராக லெப்டினன்ட் மனோஜ் சின்ஹா உள்ளார். 

அவரால், “ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு பாரிய உட்கட்டமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. வீதியமைப்பு, புகையிரதபாதைகள் அமைப்பு, மின்சார வசதிகள் அவற்றில் முக்கியமானவை. 

இதனைவிடவும் புதிய கல்விக்கொள்கை, இளையோரை மையப்படுத்திய நிகழ்ச்சித்திட்டங்கள், சுற்றுச்சூழல் மேம்பாடு உள்ளிட்ட பலவிடயங்கள் முன்னெடுக்கப்படுகின்றன” என்று குறிப்பிட்டுக் கூறினார். 

எவ்வாறாயினும், ஜம்மு-காஷ்மீரில் இந்திய மத்திய அரசாங்கம் மிகத் தாமதமான நிலையில் தன்னுடைய இலக்குகளை அங்கு மையப்படுத்தியிருக்கின்றது. 

அங்கு முன்னெடுக்கப்பட வேண்டிய பல்வேறு விடயங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக தலைநகர் ஸ்ரீநகரை மையப்படுத்திய பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றபோதும் அவை விரைவாக நிறைவுக்கு கொண்டு வரவேண்டிய தேவைப்பாடு அதிகரித்துள்ளது. 

ஜம்மு-காஷ்மீரில் வேலைவாய்ப்புக்கள் இன்மையினால் இளையோர் இருண்ட யுகத்திற்குள் இருந்தனர். இது பயங்கரவாதத்தில் தம்மை இணைத்துக்கொள்வதற்கு வழிவகுத்தது. ஆகவே அந்த நிலைமைகளும் விரைவில் சீர்செய்யப்பட வேண்டியுள்ளது. 

இதனைவிடவும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடர்ந்தும் சிக்கலான நிலைமைகள் காணப்படுவதானது அப்பகுதி மக்கள் அமைதியற்ற நிலையில் இருப்பதற்கு வித்திடுகின்றது. ஆகவே அந்த விடயத்திற்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டியதும் அவசியமாகின்றது. 

இந்திய மத்திய அரசாங்கத்திற்கு எதிரான பயங்கரவாத குழுக்களின் பிரசாரத்தால் ஈர்க்கப்பட்டவர்களின் இதயங்களையும் மனதையும் வெல்வதற்கு அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையிலான ஒரு வலுவானதும், நம்பகமானதுமான உறவு முக்கியமானது. 

இது அங்கு வாழும் உயிர்களைக் காப்பாற்றுவதோடு மோதல்களை முடிவுக்கு கொண்டுவருவதாகவும் அமையும். 

அத்துடன் அங்கு ஜனநாயக உரிமையை உறுதி செய்யும் தேர்தல்களை நடத்துவதோடு உள்ளூர் அனுபவமுள்ள அரசியல்வாதிகள் மக்கள் ஆணை பெற்று அதிகாரங்களை அடைவதானது ஆரோக்கியமான ஸ்திரத்தன்மைக்கும் வழிவகுக்கின்றது.

2019 ஆகஸ்ட் 05 முதல் ஜம்மு-காஷ்மீர் மக்கள் இந்தியாவின் உள்ளே இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதோடு மத்திய அரசாங்கம் அந்த மக்களுக்காக முன்னெடுக்கும் நலன்புரி நடவடிக்கைகள் அதனை வலுவாக வெளிப்படுத்தி நிற்கிறது. 

எவ்வாறாயினும், ஆப்பானிஸ்தானிலிருந்து அமெரிக்கா தனது படைகளை முழுமையாக பெறுவதால் விளைவுகள் ஏற்படும் என்ற எண்ணப்பாடுகள் ஜம்மு-காஷ்மீர் மக்களிடையே சிற்றலையை உருவாக்கியிருக்கின்றது. 

ஆகவே அமெரிக்கப் படைகள் ஆப்கானிலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக இந்திய மத்திய அரசாங்கம் அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு ரீதியாக அனைத்து வெற்றிடங்களையும் உடன் நிரப்புவது கட்டாயமாகிவிட்டது.