இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான IOC நாட்டின் முதல் 'பசுமை ஐதரசன்' ஆலையை அதன் மதுரா சுத்திகரிப்பு நிலையத்தில நிர்மாணிக்கவுள்ளதுடன், இது எண்ணெய் மற்றும் தூய்மையான எரிசக்தி ஆகிய இரண்டிற்கும் அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப எதிர்காலத்துக்கு தயாராகுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனமானது (IOC) ஒரு மூலோபாய வளர்ச்சி பாதையை உருவாக்கியுள்ளது. 

இது அதன் முக்கிய சுத்திகரிப்பு மற்றும் எரிபொருள் சந்தைப்படுத்தல் வணிகங்களில் கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ள அதே நேரத்தில், அடுத்த 10 ஆண்டுகளில் பெட்ரோ கெமிக்கல்ஸ், ஐதரசன் மற்றும் மின்சார போக்குவரத்து ஆகியவற்றில் பெரிய அளவில் நுழைகிறது என்று அதன் தலைவர் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா தெரிவித்தார்.

நிறுவனம் தனது எதிர்கால சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் விரிவாக்க திட்டங்களில் தனிப்பட்ட மின் உற்பத்தி நிலையங்களை (Captive Power Plant) அமைக்காது, அதற்கு பதிலாக சூரிய சக்தி போன்ற புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து உற்பத்தி செய்யும் 250 மெகாவாட் மின்சாரத்தைப் பயன்படுத்தும் என்று அவர் PTI உடனான ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

"ராஜஸ்தானில் எங்களிடம் ஒரு காற்றாலை மின் திட்டம் உள்ளது. அந்த சக்தியை எங்கள் மதுரா சுத்திகரிப்பு நிலையத்திற்கு வழங்கவும் அந்த மின்சாரத்தை மின்னாற்பகுப்பு மூலம் முற்றிலும் பசுமை ஐதரசனை உற்பத்தி செய்ய விரும்புகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

இது நாட்டின் முதல் பசுமை ஐதரசன் அலகு ஆகும். முன்னதாக இயற்கை எரிவாயு போன்ற படிம எரிபொருட்களைப் பயன்படுத்தி 'கிரே ஐதரசன்' தயாரிக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

ஐதரசன் என்பது உலகின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான அண்மைய எதிர்பார்ப்பு ஆகும்.

ஐதரசன், ஒரு சுத்தமான எரிபொருளாகும். ஆனால் அதை உற்பத்தி செய்வதற்கு அதிக சக்தி தேவைப்படுவதுடன், கார்பன் துணை தயாரிப்புகளையும் கொண்டுள்ளது.

"மதுரா TTZ (Taj Trapezium Zone) இற்கு அருகாமையில் இருப்பதால் தெரிவு செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்த வைத்யா, பசுமை ஐதரசன் சுத்திகரிப்பு நிலையத்தில் பயன்படுத்தப்படும் கார்பன்-உமிழும் எரிபொருட்களை மாற்றீடு செய்வதுடன், இது கச்சா எண்ணையை பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்களாக மாற்றுகின்றது எனக் குறிப்பிட்டார்.

விரிவாக்க திட்டங்கள் அனைத்தும் இணைப்பு மின்சாரத்தைப் பயன்படுத்தும்,  பசுமை சக்தி, எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய பெரிதும் விரும்பப்படும்.

"ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட பல விரிவாக்க திட்டங்களை நாங்கள் வைத்துள்ளோம். எங்களிடம் தனிப்பட்ட மின் உற்பத்தி நிலையம் இருக்காது. மேலும் இணைப்பு மின்சாரம், குறிப்பாக பசுமை சக்தி ஆகியவற்றைப் பயன்படுத்துவோம். இது உற்பத்தியின் சில பகுதியில் காபனைக் குறைக்க உதவும்" என்று அவர் கூறினார்.

IOCயின் சுத்திகரிப்பு விரிவாக்க திட்டங்களில் ஹரியானாவின் பானிபட் மற்றும் பீகாரில் உள்ள பரவுனி ஆகிய இடங்களில் அலகுகளின் திறனை உயர்த்துவது மற்றும் சென்னைக்கு அருகில் ஒரு புதிய அலகு அமைத்தல் ஆகியவை அடங்கும்.

"2023 - 24 ஆம் ஆண்டில் நாங்கள் 25 மில்லியன் டன் சுத்திகரிப்பு திறனைச் இணைத்துக் கொள்ள போகிறோம். நாங்கள் இப்போது 80.5 மில்லியன் டன்களாக உள்ளோம், சிபிசிஎல் உட்பட நாங்கள் 105 மில்லியன் டன்களாக இருக்கப் போகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

ஐதரசன், எதிர்காலத்தின் எரிபொருளாக இருக்கும் என்றார். பரீட்சார்த்த அடிப்படையில் பல ஐதரசன்  உற்பத்தி பிரிவுகளை அமைக்க IOC திட்டமிட்டுள்ளது. குஜராத் சுத்திகரிப்பு நிலையத்தில் ஐதரசன் எரிபொருள் கல பேருந்துகளுக்கு 99.9999 சதவீத வரையறுக்கப்பட்ட தூய்மை ஐதரசனை உற்பத்தி செய்யும் திட்டமும் இதில் அடங்கும். 

"இன்று, டெல்லியில் 50 பேருந்துகள் ஐதரசன் செறிவூட்டப்பட்ட சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு அல்லது 18 சதவிகித ஹைட்ரஜன் உள்ளடக்கத்தைக் கொண்ட H-CNG மூலம் இயங்குகின்றன" என்று அவர் தெரிவித்தார்.

பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் IOCயின் முக்கிய வணிகங்களாக தொடர்ந்து நீடிப்பதுடன், பெட்ரோ கெமிக்கல்ஸ் அதிக ஒருங்கிணைப்பைக் கொண்டிருக்கும்.

மேலும், எரிவாயு ஒரு பெரிய வகிபாகத்தைக் கொண்டிருக்குமென்பதுடன், பெட்ரோல் பம்புகள் மற்றும் திட்டமிடப்பட்ட பற்றரி உற்பத்தி அலகு ஆகியவற்றில் சார்ஜிங் நிலையங்கள் மூலம் மின்சார போக்குவரத்து வெளியில் நிறுவனம் பிரசன்னத்தைக் கொண்டிருக்கும்.

பல்வேறு நிறுவனங்களின் கணிப்புகளின் பிரகாரம் 2040 ஆம் ஆண்டில் இந்திய எரிபொருள் தேவை 400 - 450 மில்லியன் டன்னாக உயருமெனவும், இப்போதைய நிலையில் இதன் அளவு 250 மில்லியன் டன்களாகும்.

IOC ஏற்கனவே பற்றரி மாற்று நிலையங்களை பல நகரங்களில் அமைத்துள்ளதாக வைத்யா தெரிவித்தார்.

நிறுவனம் ஏற்கனவே நாடு முழுவதும் மாற்று நிலையங்கள் உட்பட 286 சார்ஜிங் நிலையங்களை நிறுவியுள்ளது, இது அடுத்த சில ஆண்டுகளில் 3,000 EV சார்ஜிங் நிலையங்களாக உயர்த்தப்படும்.