ஐக்கிய தேசியக்  கட்சியின் 70 ஆவது ஆண்டு பூர்த்தி விழா இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

70 ஆவது ஆண்டு பூர்த்தி விழாவுக்காக  எதிர்வரும் 10 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு பொரளை கெம்பல் மைதானத்தில் மாபெரும் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு இலட்சக்கணக்கான மக்கள் கொழும்பு நகருக்கு ஒன்று கூடவுள்ளனர்.

 மாநாடு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.  இந்த மாநாட்டில்  கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் 

அத்துடன்  மாநாட்டிற்கு வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள தொகுதி மட்டத்திலிருந்து மக்கள் பங்கேற்கவுள்ளனர்.

நாட்டின் பழமையான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 1946 ஆம்  ஆண்டு செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி இலங்கையின் முதலாவது பிரதமர் டி.எஸ் சேனாநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்டது. 

கட்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து பல தடவைகள் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர்கள் நாட்டை ஆட்சி புரிந்துள்ளனர். இதன்படி டி.எஸ் சேனாநாயக்க, டட்லி சேனாநாயக்க, சேர்.ஜோன் கொத்தலாவல, ஜே.ஆர் ஜெயவர்தன, ஆர்.பிரேமதாஸ, டி.பி விஜேதுங்க ஆகியோர் உள்ளடங்குகின்றனர். மேலும் தற்போதைய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க நான்காவது தடவையாக   பிரதமராக பதவி வகித்து வருகின்றார்.

இதேவேளை கட்சியின் 70 வருட பூர்த்தியை முன்னிட்டு நேற்றைய தினம் விசேட பௌத்த சமய அனுஷ்டானங்கள் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்றன. இந்நிகழ்வில் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் ஏனைய மத அனுஷ்டானங்கள் நாளைய தினம் நடைபெறவுள்ளமை குறிப்பிடதக்கது.