ஆசியான் மற்றும் சார்க் வலய நாடுகளை ஒன்றிணைத்து புதிய சுகாதார கட்டமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் அதன்மூலம் திடமான சுகாதார அபிவிருத்திகளை இலங்கையில் ஏற்படுத்த முடியும் என  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மேலும் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வு மூலமே எமக்கு ஏற்படும் சவால்களுக்கு இலகுவாக முகங்கொடுக்க முடியும். இதனடிப்படையில் சுகாதாரத்துறையில்  ஏற்படும் சவால்களை முறியடிக்க தனியே அரசத்துறையை மாத்திரம் நம்பியிருக்காது தனியார்த்துறையினரின் பங்களிப்பும் அவசியமெனவும்  பிரதமர்  குறிப்பிட்டார்

உலக சுகாதார தாபனத்தின் தென்கிழக்காசிய நாடுகளுக்கான பிராந்திய கூட்டமைப்பின் 69 ஆவது மாநாடு நேற்று திங்கட்கிழமை கொழும்பில் ஆரம்பமானது. 11 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் மற்றும் உலக சுகாதார தாபனத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்ட இந்நிகழ்வில் சிறப்புறையாற்றுகையிலேயே     அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 பிரதமர்  தொடர்ந்து குறிப்பிடுகையில்,

சுகாதாரத்துறையில் இன்று பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. காலத்துக்கு காலம் புதுப்புது கண்டுப்பிடிப்புகளும் வளர்ச்சி பாதைகளும் மனிதனின் ஆயுற்காலத்தை வளர்ச்சியடைய செய்துள்ளன. நாம் சுகாதாரத்துறைக்கு தேவையான வளத்தை பெருக்கிக்கொள்ள வேண்டும். அதற்கான தேவை தற்போது எழுந்துள்ளது.

சாதாரண மக்களின் தேவையை கண்டறிந்து அவர்களுக்கான சுகாதார வசதிவாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இதற்கு பிரித்தானியாவின் புதிய சுகாதார கொள்கைகளை உதாரணமாக கொள்ளலாம். எனவே எமது சுகாதாரத்துறையின் வளர்ச்சி பாதைக்கு வெறுமனே அரசத்துறையை மாத்திரம் நம்பி இருக்க முடியாது. தனியார்த்துறையினரின் பங்களிப்போடு அனைவருக்கும் பொதுவான சுகாதாரத்துறை மேம்பாட்டை அடைய வேண்டும்.

அதற்கான ஆய்வுகளும் கற்கைகளும் மிகவும் அவசியமான தேவையாக உள்ளன. அடிப்படை சுகாதாரத்தை அடைவதில் தேவையான அனைத்து வசதிவாய்ப்புகளும் ஏற்படுத்தப்படும். இந்த மாநாடு தொற்றா நோய் தொடர்பில் அதிகம் கவனம் செலுத்துகின்றது. தொற்றா நோய்கள் காரணமாகவே அதிகளவிலான மரணங்கள் ஏற்படுகின்றன. ஏனவே நாமும் சுகாதாரத்துறையில் தொற்றா நோய்க்கான சிகிச்சைகள் மற்றும் அதற்கான சுகாதார மேம்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

குறித்த சுகாதாரத்துறை மேம்பாட்டுக்கான தென்கிழக்காசிய மாநாட்டில் இரண்டு முக்கியமான வலய நாடுகள் பங்கெடுக்கின்றன. அதாவது சார்க் நாடுகள் மற்றும் ஆசியான் வலய நாடுகள் ஒன்றிணைந்து பல தீர்க்கமான முடிவெடுக்க கூடிய சந்தர்ப்பம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை நாம் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

சார்க் மற்றும் ஆசியான் நாடுகள் ஒன்றிணைந்து பொதுவானதொரு சுகாதார திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். இதன்மூலம் இவ்வலயத்தில் உள்ள சுகாதார மேம்பாட்டுக்கான வேலைத்திட்டங்களை இலகுவாக கொண்டு செல்ல முடியும். அத்தோடு சிலவேளை ஆசியான் வலயத்தில் உள்ள நாடுகளின் சுகாதார பிரச்சினை எமது நாட்டுக்கும் பொருந்தக்கூடியதாக இருக்கும். எனவே நாம் அவற்றை கண்டறிந்து ஒரு பொதுவான சுகாதார அலகுக்குள் பயணிக்க வேண்டும்.

இவ்விரு வலயங்களுக்குமிடையிலான சுகாதார மேம்பாட்டுக்கு இவ்வாறானதொரு மாநாடு புதிய பல வழிகளை தோற்றுவிக்கும். நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு மற்றும் புரிந்துணர்வு போன்றனவே சுகாதாரத்துறையின் வளர்ச்சி பாதைக்கு அவசியமான தேவையாக உள்ளன.  அதுவே எமது நாட்டு மக்களின் சுகாதார நலனை விருத்தி செய்வதற்கான மார்க்கமாக அமையும் என்றார்.