இந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் குழந்தைகளின் உயிரிழப்பு வீதம் அதிகரித்துள்ளது.

இந்தோனேசியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா தொற்றால் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உயிரிழந்தனர். இவர்களில் பலர் ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த இறப்பு வீதம் ஏனைய நாடுகளை விட அதிகமாகும். நாடு முழுவதும் டெல்டா வகை கொரோனா தொற்று அதிகரித்துள்ளதே குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

உலகின் நான்காவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தோனேசியா, இந்த மாதம் நாளாந்த தொற்றாளர்களின்  எண்ணிக்கையில் இந்தியாவையும் பிரேசிலையும் முந்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஒரேநாளில் புதிதாக ஐம்பதாயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், 1,566 பேர் உயிரிழந்ததாகவும், தொற்றுக்குள்ளானோரில் 12. 5 வீதத்தினர் குழந்தைகள் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

ஜூலை 12 ஆம் திகதியுடன் முடிந்த வாரத்தில் மட்டும் 150 க்கு மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளதாகவும், இவர்களில் பாதிப்பேர் ஐந்து வயதுக்குட்பட்டோர் என்றும் தெரியவந்துள்ளது.