(இராஜதுரை ஹஷான்)

2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சையை 2022 ஆம் ஆண்டு  பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி திங்கட்கிழமை முதல்  மார்ச் மாதம்  3 ஆம் திகதி வியாழக்கிழமை வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.   

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தினை கருத்திற் கொண்டு 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்  நடத்த தீர்மானிக்கப்பட்ட பரீட்சை இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல் பீறிஸ் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2021 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர சாதாரணதர பரீட்சையை  2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் இறுதி வாரத்தில் நடத்த ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. 

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தின் காரணமாகவும், மாணவர்களின் பாடத்திட்டம் முழுமையடையாத காரணத்தினாலும் சாதாரண தர பரீட்சையை நடத்தும் திகதியில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய 2021 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சையை  2022 ஆம் ஆண்டு  பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரை நடத்த தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி பொதுதராதர உயர்தரம் மற்றும் ஐந்தாம்  ஆண்டு புலமை பரிசில் ஆகிய பரீட்சைகள் ஏற்கெனவே குறிப்பிட்டதை போன்று எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்தப்படும்.

பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை கல்வி சாரா ஊழியர்களுக்கு கொவிட் -19 வைரஸ்   தடுப்பு முதற்கட்ட தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இன்று காலை வரை கிடைக்கப் பெற்ற தரவுகளுக்கு அமைய மாகாண அடிப்படையில்  கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மேல்மாகாணத்தில் 98 சதவீதமும்,தென்மாகாணத்தில் 83 சதவீதமும்,வடமேல் மாகாணத்தில்82 சதவீதமும், வட மத்திய மாகாணத்தில்  82சதவீதமும்,  ஊவா மாகாணத்தில் 80 சதவீதமும், மத்திய மாகாணத்தில் 69 சதவீதமும், வடக்கு மாகாணத்தில் 62 சதவீதமும், சப்ரகமுவ மாகாணத்தில் 52 சதவீதமும், கிழக்கு மாகாணத்தில் 48 சதவீதமும் நிறைவுப் பெற்றுள்ளன.

ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு  கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இதுவரையில் 77 சதவீதம் முழுமைப் பெற்றுள்ளன. இவர்களுக்கு எதிர்வரும் மாதம் முதல் வாரத்தில் இருந்து இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை வழங்க எதிர்பார்த்துள்ளோம்.