(எம்.மனோசித்ரா)

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் பணிக்கமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்துடன் தொடர்புடைய விசாரணைகள் எந்த விதத்திலும் எந்தவொரு நபரதும் அழுத்தங்களுக்கு உட்படாது சுயாதீனமாக பக்க சார்பற்ற முறையில் முன்னெடுக்கப்படுகின்றன. 

பொலிஸ் தலைமையகம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு ! | Virakesari .lk

அதற்கமைய குற்றமிழைத்த சகலரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு இலங்கை பொலிஸ் நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிஸ் தலைமையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

சம்பவம் தொடர்பில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்று சனிக்கிழமை புதுக்கடைய இலக்கம் 2 நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். 

அதனையடுத்து அவர்கள் குற்றவியல் சட்டங்களுக்கமைய 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு , இது தொடர்பான வழக்கு மீண்டும் நாளை மறுதினம் புதன்கிழமை (28) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகள் எந்த விதத்திலும் எந்தவொரு நபரதும் அழுத்தங்களுக்கு உட்படாது சுயாதீனமாக பக்க சார்பற்ற முறையில் முன்னெடுக்கப்படுகின்றன.

நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக இது தொடர்பில் அறிவிக்கப்பட்டு குற்றமிழைத்தவர்கள் சகலரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு இலங்கை பொலிஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதே போன்று சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் விசாரணைகள் சரியான முறையில் வினைத்திறனுடன் முன்னெடுக்கப்படுவதற்கான ஆலோசனை வழங்கியதோடு முறைப்பாட்டாளர் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கமைய மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் குற்றம் மற்றும் போக்குவரத்துக்க பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜிர் ரோஹண ஆகியோரது கண்காணிப்பின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை பொலிஸ் சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளை சரியான முறையிலும் சுயாதீனமாகவும் பக்கசார்பற்ற முறையிலும் மற்றும் பொறுப்புடனும் முன்னெடுத்து வருகிறது என்பதை பொறுப்புடன் சுட்டிக்காட்டுகின்றோம், எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.