(எம்.மனோசித்ரா)

டெல்டா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை எதிர்வரும் சில வாரங்களில் உலகலாவிய ரீதியில் 200 மில்லியனை விட அதிகரிக்கக் கூடும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.

இது வரையில் உலகிலுள்ள சுமார் 124 நாடுகளில் டெல்டா வைரஸ் பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்வரும் காலங்களில் இந்த டெல்டா திரிபானது உலகலாவிய ரீதியில் பரவக் கூடிய பிரதான கொவிட் திரிபாக உருவெடுக்கக் கூடும் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக ஐரோப்பா மற்றும் மேற்கு பசுபிக் பிராந்தியத்திற்குள் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் கனிசமாளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

சில மேற்குலக நாடுகளில் மரணங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையால் அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

எவ்வாறிருப்பினும் தடுப்பூசி வழங்கும் பணிகள் மந்தமாக முன்னெடுக்கப்படும் நாடுகளில் அவ்வாறு கொவிட் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதானது எதிர்காலத்தில் அபாயமாகக் அமையக் கூடும் என்றும் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.