(இராஜதுரை ஹஷான்)
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான சிறுமியின் மரணத்திற்கான உண்மை காரணிகள் விரைவில் பகிரங்கப்படுத்தப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத்தின் வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்ட 16 வயது சிறுமி தீக்காயங்களுக்குள்ளான நிலையில் மரணித்த சம்பவம் கவலைக்குரியது. சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவது குற்றச்செயலாகும். பொறுப்பு வாய்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரது வீட்டில் இவ்வாறானதொரு சம்பவம் இடம் பெற்றுள்ளமை பாரதூரமானது. இலவச கல்வி வழங்கப்படும்  நாட்டில் மாணவர்களின் கல்விக்கு குடும்ப வறுமை ஒரு  தடையாக  இருப்பது ஆச்சரியத்திற்குரியது.

 இச்சிறுமியின் மரணத்தை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வெளியாகும் ஒரு சில செய்திகள் மற்றும் அதற்கு இரு சமூகத்தை சேர்ந்தவர்களும் பதிவிடும் கருத்துக்களும் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் அமைந்துள்ளன. எனினும் அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இச்சம்பவம் ஒருபோதும்  மறைக்கப்படமாட்டாது. அதற்கான தேவையும் அரசாங்கத்திற்கு கிடையாது என்றார்.