(எம்.மனோசித்ரா)
நாட்டில் மரியாதைக்குரியதும் மற்றும் சமூக பொறுப்பை நிறைவேற்றுகின்ற ஆசிரிய தொழிற்சங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. எனினும் இந்த விவகாரத்தின் மூலம் எதிர்க்கட்சி அரசியல் இலாபத்தைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கிறது என்று கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.

அத்தோடு கீழ்மட்ட சுகாதார விதிமுறைகளைக்  கூட  பின்பற்றாமல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்து நாடளாவிய ரீதியில் கொவிட் வைரஸைப் பரப்பும் செயற்பாடுகளிலும் எதிர்க்கட்சி ஈடுபடுவதாகவும் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா குற்றஞ்சுமத்தினார்.

மேலும், எதிர்க்கட்சி நாடளாவிய ரீதியில் கொவிட் வைரஸை பரப்பிக் கொண்டிருக்கிறது. இலங்கை மாத்திரமின்றி முழு உலக நாடுகளும் கொவிட் வைரஸ் தொற்றை எதிர்கொண்டுள்ள நிலையில் நாட்டு மக்களை அதிலிருந்து பாதுகாப்பதற்கான பொறுப்பை ஏற்பதற்கும் , அதற்கான ஒரு உதாரணமாக இருப்பதற்கும் எதிர்க்கட்சி செயற்படவில்லை.

அவர்கள் கீழ்மட்ட சுகாதார விதிமுறைகளைக் கூட பின்பற்றாமல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்து நாடளாவிய ரீதியில் கொவிட் வைரஸைப் பரப்புகின்றனர். குறைந்தபட்ச பொறுப்பைக் கூட அவர்கள் நிறைவேற்றவில்லை. இது தேர்தலை நடத்தும் காலம் இல்லை. அத்தோடு இந்த சந்தர்ப்பம் அரசியல் நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்றிக் கொள்வதற்கானதும் அல்ல என்றார்.