(எம்.மனோசித்ரா)
நாட்டில் பல பகுதிகளிலும் நேற்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் சுமார் 25 இலட்சம் பெறுமதியான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கல்கிசஸை பொலிஸாரால் அத்ஹிட்டிய பிரதேசத்தில் 210 கிராம் ஹெரோயினுடன் 41 வயதுடைய பெண்ணொருவரும், 50 வயதுடைய சந்தேக நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் மேலும் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கான நீதிமன்ற உத்தரவு பெற்றுக் கொள்ளப்படவுள்ளது. இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் மொத்த பெறுமதி சுமார் 21 இலட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று மொரட்டுவை பிரதேசத்தில் மொரட்டுவை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 10 கிராம் ஹெரோயினுடன் 25 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொட தெற்கு குற்றவிசாரணைப் பிரிவினரால் கொஹூவல பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 15 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிராண்பாஸ் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 10 கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.