(நா.தனுஜா)

அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், இதுகுறித்து உரியவாறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, நீதிமன்றத்தினால் இறுதித்தீர்மானம் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். 

மிக மோசமான வெளிநாட்டுக்கொள்கைகளை நோக்கி அரசாங்கம் நகர்ந்துள்ளது - எரான்  விக்ரமரத்ன | Virakesari.lk

இருப்பினும் இது இனவாதத்துடன் தொடர்புடைய பிரச்சினையல்ல என்பதைப் புரிந்துகொள்வதும் அவசியமாகும்.

இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் அமைச்சர்களாக இருந்தாலும், நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும் அனைவருக்கும் சட்டம் ஒரேவிதமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துவெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அங்கு அவர் மேலும் கூறியதாவது:

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியாகிவருகின்றன.

இதுகுறித்து பொலிஸ் மற்றும் நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்றுவருவதனால் அதுகுறித்து நான் எதனையும் கூற விரும்பவில்லை. 

ஆனால் இது இனவாதத்துடன் தொடர்புடைய பிரச்சினையல்ல என்பதை முதலில் நினைவில்கொள்ளவேண்டும். இவ்விவகாரத்தில் சட்டம் உரியவாறு நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.

எமது நாட்டில் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் ஒருபோதும் இடமளிக்கமுடியாது.

இவ்விடயத்தில் குற்றங்கள் இடம்பெற்றிருந்தால் அதுகுறித்து உரியவாறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, நீதிமன்றத்தினால் இறுதித்தீர்மானம் மேற்கொள்ளப்பட வேண்டும். 

இவ்வாறான சம்பவங்களில் அமைச்சராக இருந்தாலும், நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும், யாராக இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் ஒரேவிதமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அடுத்ததாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் எமது நாட்டிலுள்ள சட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக வீடுகளில் சிறுவர்க்ளை வேலைக்கமர்த்துவது முற்றுமுழுதாகத் தடைசெய்யப்பட வேண்டும்.