இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதல் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டியானது இன்றிரவு 8.00 மணிக்கு கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரினை இலங்கை இழந்திருந்தாலும், மூன்றாவது போட்டியில் ஈட்டிய வெற்றி இலங்கை வீரர்களின் உத் வேகத்தை அதிகரித்துள்ளது.

நீண்ட காலமாக தோல்விகளினால் சோர்ந்து போன இலங்கை அணியினர், மூன்றாவது போட்டியில் இந்தியாவை வீழ்த்தியமை ஒரு அணியாக அவர்கள் பெற்ற முன்னேற்றம் வீரர்களின் நம்பிக்கையை உயர்த்தியுள்ளது. 

இந்திய அணியும் ஒரு சில இளம் வீரர்களுடன் இலங்கை அணியினருடன் பலப்பரீட்சை நடத்தியிருந்தாலும், அனுபவத்தின் அடிப்படையில் அவர்கள் இலங்கை வீரர்களை விட மிகவும் முன்னிலையில் உள்ளனர். 

இந்த அணியில் உள்ள அனைத்து வீரர்களும் சர்வதேச தரத்தில் கருதப்படுகிறார்கள். 

இருப்பினும் மூன்றாவது போட்டியில் சமர்த்தியமாக இந்தியாவை வீழ்த்தியமை டி-20 போட்டிகளுக்கு இலங்கைக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது.

இந் நிலையில் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக பானுக ராஜபக்ஷ இப் போட்டியில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பானுகா ராஜபக்ஷ காயத்துடன் 3 ஆவது ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி 56 பந்துகளில் 65 ஓட்டங்களை குவித்திருந்தார்.

இதனிடையே காயம் காரணமாக மூன்றாவது போட்டியில் விளையாடாத வாணிந்து ஹசரங்க இப் போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்பவுள்ளார்.

ஒரு நாள் தொடரில் முதல் 2 போட்டிகளிலும் அசத்திய இந்திய அணி இறுதி ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இதில் 5 புதுமுகங்களை பயன்படுத்தி பார்த்த இந்திய அணி களத்தடுப்பில் தடுமாறியது. 

எனவே இன்றைய ஆட்டத்தில் முழுமையான அணியாக இந்தியா களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி அறிமுக வீரராக இடம்பெறுவார் என்று தெரிகிறது.