இரண்டாவது பதவிக்காலம்: பலிக்குமா கனவு?

By J.G.Stephan

25 Jul, 2021 | 12:43 PM
image

-கார்வண்ணன் -

 “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவிக்கு வந்து, பதவிக்காலத்தின் மூன்றில் ஒரு பங்கை முடித்து விட்ட போதும், அவரால் அடையப்பட்ட சாதனை எதுவும் இல்லை”

“பஷில் ராஜபக்ஷ அரசாங்கத்திற்குள் பிரவேசித்து சொற்ப நாட்களில் தான் ஜனாதிபதி கோட்டாபய இரண்டாவது பதவிக்காலத்திற்காக போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கின்றார் என்பது கவனிக்கத்தக்கது”

இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிக்கு வந்த பலரும், ஆரம்பத்தில் இரண்டு விடயங்களைக் கூறியிருந்தார்கள். ஒன்று, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிப்பேன் என்பது. இன்னொன்று இரண்டாவது முறை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடமாட்டேன் என்பது.

இதுவரை நிறைவேற்று அதிகாரத்துக்கு வந்த எல்லா ஜனாதிபதிகளுமே, இந்த இரண்டு வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவி ஒழிக்கப்படும் என்று கொடுக்கப்பட்ட வாக்குறுதி, இப்போது அதனை இன்னும் கூடுதலாக வலுப்படுத்துவதில் தான் வந்து நிற்கிறது.

இன்னொரு பக்கம், இரண்டாவது பதவிக்காலத்துக்கு போட்டியிடுவதில் பெரும்பாலான ஜனாதிபதிகள் உறுதியாகவே இருந்துள்ளனர். ஜே.ஆர் ஜயவர்த்தன 1978 அரசியலமைப்பின் மூலம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக தன்னைத்தானே மாற்றிக் கொண்ட பின்னர், ஆறு ஆண்டுகளில் நடத்தப்பட வேண்டிய தேர்தலை நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் நடத்தப்படும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்து 1982இல் இரண்டாவது பதவிக்காலத்துக்காக போட்டியிட்டிருந்தார்.

அவருக்குப் பின்னர் பதவிக்கு வந்த பிரேமதாச, இரண்டாவது பதவிக்காலத்துக்கு தயாராக முன்னரே படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் இடைக்கால ஜனாதிபதியாக இருந்த டி.பி விஜேதுங்கவுக்கு பெரிய அரசியல் பின்னணி இல்லாததால், போட்டியிடுவது குறித்து எண்ணிப் பார்க்க கூட முடியவில்லை. சந்திரிகா குமாரதுங்க நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாக கொடுத்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. இரண்டாவது பதவிக்காலத்தை அனுபவிக்கவும் தவறவில்லை.

மஹிந்த ராஜபக்ஷவும் அவ்வாறு தான், இரண்டாவது பதவிக்காலத்துக்காக மட்டுமன்றி மூன்றாவது பதவிக்காலத்துக்கு அவசரப்பட்டு தேர்தலை நடத்தியதால், இரண்டு பதவிக்காலங்களின் முழு அளவான 12 ஆண்டுகள் பதவியில் இருப்பதற்குப் பதிலாக, 9 ஆண்டுகளே அவரால் ஆட்சியில் இருக்க முடிந்தது.

அதற்குப் பின்னர் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாக பதவிக்கு வந்த மைத்திரிபால சிறிசேன, அதனை பலவீனப்படுத்த முயன்றாலும், இன்னொரு பதவிக்காலத்துக்கு ஆசைப்பட்டார். அந்தக் கனவு ஈடேற வழியில்லை என்ற கட்டத்தில் தான், போட்டிக்களத்தில் இருந்து ஒதுங்கினார்.

இப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் வாக்குறுதியுடன் பதவிக்கு வராவிடினும், ஒருமுறை தான் பதவியில் இருப்பேன் அதற்குள் நாட்டைச் சுத்தப்படுத்தி, புதிய யுகத்தை உருவாக்குவேன் என்ற கவர்ச்சியான வாக்குறுதியுடன் தான் களமிறங்கியிருந்தார்.

அவரது பதவிக்காலத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் முடியப் போகின்ற நிலையில் தான், அவரது வாயில் இருந்து இன்னொரு பதவிக்காலத்துக்கான விருப்பம் வெளிப்பட்டிருக்கிறது. அண்மையில் ஊடக பிரதானிகளை சந்தித்த போது ஜனாதிபதி “தனது திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மூன்று ஆண்டுகள் இல்லை. மேலும் ஐந்து ஆண்டுகள் உள்ளன” என்று கூறியிருக்கிறார்.

இது வாய்தடுமாறி வெளிப்பட்ட வார்த்தைகள் இல்லை. அவர் தனது அடுத்த பதவிக்காலத்துக்குத் தயாராகிறார் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார். ஜனாதிபதியின் ஊடக பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க ஜனாதிபதியின் கூற்றின் இந்தப் பகுதியை தமது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க
https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-07-25#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க
https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right