- குடந்தையான்- 
தமிழக மக்களில் ஒரு பிரிவினர் தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திக் கொண்டு கொரோனாவின் அச்சப்பிடியிலிருந்து மெல்ல மெல்ல விலக தொடங்கி தொடங்கியிருக்கிறார்கள். வேறு ஒரு பிரிவினரோ கொரோனாவுடன் வாழ்வது எப்படி? என்பதை பழக்கப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தமிழக மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வழிகளில் தி.மு.க. அரசு எப்படி செயற்படவிருக்கிறது என்பதை ஆவலுடன் எதிர்நோக்கியிருக்கிறார்கள். 

இதனை உணர்ந்த ஆளும் கட்சியான தி.மு.க., மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்ய விரும்பினாலும், அதற்கு இடம்கொடுக்காத வகையில் அரசின் கடன் சுமை அதிகமாக இருப்பதால், அரசின் வருவாயை அதிகரிப்பதற்காக சில விடயங்களை வணிக ரீதியாக அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறது. அடுத்த மாத தொடக்கத்தில் தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா நடைபெறுவதால், அதற்குப் பிறகு நடைபெறவிருக்கும் தமிழக பட்ஜட் கூட்டத்தொடரில் அதனை அறிமுகப்படுத்த விரும்புகிறது.

இந்த தருணத்தில் லொத்தர் குறித்து தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் “சீனா, அமெரிக்கா மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையுடன் மீண்டும் லொத்தர் அறிமுகப்படுத்தவிருக்கிறோம். இந்தியா முழுமைக்கும் அரசின் பல்வேறு நலத் திட்டங்களில் ஆதார் கார்டு பயன்படுத்தப்படுவது போல் லொத்தர் சீட்டு விற்பனையிலும் பயன்படுத்தவிருக்கிறோம்” என்று குறிப்பிடுகின்றார்கள். 

அத்துடன், “தற்போதைய காலம் டிஜிட்டல் யுகம். மக்களாட்சியில் எதிலும் வெளிப்படைத்தன்மை எதிர்பார்க்கப்படும் காலமும்கூட. ஏதேனும் தவறுகள் நடந்தால் உடனடியாக வெளிப்பட்டுவிடும். மக்களுக்கு தெரியாமல் எந்த வகையான அரசியலையும் செய்ய இயலாது. அதனால் லொத்தர் சீட்டை மீண்டும் தி.மு.க. அறிமுகப்படுத்துவது, மக்கள் நல திட்டங்களை செயல் படுத்துவதற்காக அரசின் வருவாயை உயர்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக தான் மட்டும் என்பதை அனைவரும் உறுதியாக தெரிந்து கொள்ள வேண்டும்” என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். 

ஆனால் தி.மு.க. லொத்தரை அறிமுகப்படுத்தினால், அதனை அ.தி.மு.க. வலிமையாக எதிர்க்கும். அத்துடன் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கான அரசியல் ஆயுதமாகவும் அதனை அ.தி.மு.க. பயன்படுத்தும். அதனால் மு.க.ஸ்டாலினின் ‘லொத்தர் அரசியல் கணக்கு’, தற்போதைய சூழலில்  தி.மு.க.வால் முன்மொழியபட வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளன.

இவ்வாறிருக்க, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ‘இரட்டை தலைமை’யால் உட்கட்சிப் பூசல் ஏற்பட்டது. தற்போது ஆளும் கட்சியான தி.மு.க.விலும், முதல்வர் ஸ்டாலினின் உறவினர் ஒருவரால் அக்கட்சியிலும் உட்பூசல் ஏற்பட்டிருக்கின்றது. இதனை தி.மு.க. நிர்வாகிகள் சிலரே,‘ஜெயலலிதா அம்மையாருக்கு எப்படி சசிகலா, மறைமுக சக்தியாக இயங்கினாரோ... அதேபோல் தற்போதைய முதல்வரான ஸ்டாலினுக்கு அவரது மருமகன் சபரீசன் மறைமுக சக்தியாக இயங்கி வருகிறார். இதனை கட்சியின் மூத்த தலைவர்கள் வேறு வழியில்லாமல் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாகவே பல மூத்த தலைவர்கள், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவு கரம் நீட்டி வருவதாக தெரிவிக்கிறார்கள்.

வேறு சிலரோ தி.மு.க.வில் கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின் எப்படி முன்னிலைப்படுத்தப்பட்டு, முன்னணித் தலைவராக முன்னேறினாரோ, அதேபோல் உதயநிதி ஸ்டாலினுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, முன்னேற வேண்டும் என்பதற்காக ஸ்டாலினின் ‘மறைமுக அரசியல் கணக்கு’ இது என்கிறார்கள் விவரமறிந்த உதயநிதியின் ஆதரவாளர்கள். இதனை சற்று தாமதமாக உணர்ந்த சபரீசன், கட்சியில் மறைமுகமான வலிமையுடன் இயங்குவதை விட, வெளிப்படைத்தன்மையுடன் இயங்குவதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி இருக்கிறார். 

விரைவில் அவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்படுவார் என்று அவர் தரப்பு ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள். மகனா, அல்லது மருமாகனா இவர்களில் யார் தனது அரசியல் சக்தியாக வளர்த்தெடுக்கப்படுவார்கள் என்பதற்காக ஸ்டாலின் நகர்த்தி வரும் ‘அரசியல் கணக்கு’ அவர் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா? அல்லது பாரதூரமான பாதகமான விளைவை ஏற்படுத்துமா? என்பதும் உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு நிச்சயமாக தெரியவரும். 

அண்மையில் ‘தமிழக அரசியலில் நீட் தேர்வு விவகாரத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை தி.மு.க. நிறைவேற்றாததால், மக்களை ஏமாற்றி விட்டது தி.மு.க. என்று அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி கே.பழனிச்சாமி பகிரங்கமாக குற்றம்சாட்டி இருக்கிறார். 

இது தொடர்பாக தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள், நீட் தேர்வை தி.மு.க. எதிர்ப்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது என்று கூறி ஒரு பட்டியலை வெளியிட்டனர். அதில் நீட் தேர்வு அனைத்து வகையிலும் மிக மோசமான தேர்வு முறை என்று குறிப்பிட்டதோடு இந்தியாவில் பல்வேறு கல்வி முறைகள் இருக்கிறது. பாடத்திட்ட முறைகள் இருக்கிறது. ஆனால் இதில் ஒரே ஒரு பாடத்திட்ட முறையில் படித்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத வசதியாக வினாக்கள் நீட்தேர்வில் கேட்கப்படுகிறது.

இது அறிவுத் துரோகம் என்பதால் வன்மையாக எதிர்க்கிறோம்.  அடுத்ததாக இந்தத் தேர்வில் பங்கு பற்றி சாதாரணமான தேர்ச்சி மதிப்பெண்களை பெற வேண்டுமானால், பல இலட்சங்கள் செலவு செய்து இதற்கான பிரத்யேக பயிற்சி மையங்களில் பயிற்சி எடுக்க வேண்டும். இது பொருளாதார ரீதியாக சக்தியற்ற மாணவச் செல்வங்களுக்கு சாத்தியமானதாக இல்லை.

எனவே இதுவும் வேறுவகையான பொருளாதார சுரண்டல் என்பதால், இந்த தேர்வு முறையை எதிர்க்கிறோம். அத்துடன் நீட் தேர்வு முறையில் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் இதற்காக தயாரான மாணவர்கள்தான் அதிக மதிப்பெண் பெற இயலுகிறது.  இது மோசமான வாய்ப்பு மறுப்பாகும். அனைத்து மாணவர்களாலும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் இதற்காக ஒதுக்கி தயாராக முடியுமா? 

இந்த வாய்ப்பு மறுப்பு, சமத்துவத்திற்கு எதிரானது. பன்னிரண்டு ஆண்டுகள் கற்ற கல்விக்கு வழங்கப்படும் முக்கியத்துவத்தை விட, ஒரே ஒரு வினாத்தாள் மூலமாக மட்டுமே ஒரு மாணவனின் அறிவை சோதித்து விடலாம் என்பது பொறுப்பற்ற தன்மை என்பதாலும் இதனை எதிர்க்கிறோம்.’ என்று அந்த பட்டியல் நீண்டு செல்கிறது. 

இதனிடையே நீட் தேர்வு விவகாரத்தில் அரசு, கல்வி முறை, தேர்வு முறை ஆகியவற்றிற்கும், மாணவர், ஆசிரியர், பெற்றோர்கள் ஆகியோருக்கும் இடையே பாரதூரமான கருத்தியல் ரிதீயிலான இடைவெளி இருப்பதாக கல்வியாளர்கள் கருதுகிறார்கள். இந்த இடைவெளியை களைய வேண்டிய பொறுப்பு அரசுக்கும், அரசிற்கு ஆலோசனையும், வழிமுறையையும் வழங்கும் நீதிமன்றத்திற்கும் உண்டு என்பதை அனைவரும் உணர வேண்டும். 

இவ்விவகாரத்தில் நீதிமன்றம், சமூக நீதியையும் மனதில் வைத்து நல்லதொரு தீர்ப்பை, மறுபரிசீலனை செய்து வழங்க வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் ‘நீட் தேர்விற்கு தமிழகத்திற்கு விலக்களிக்கவேண்டும்’ என்று ஸ்டாலினின் அரசியல் கணக்கு துல்லியமாக ஏற்கப்பட்டால், அவரின் அரசியல் செல்வாக்கு உயரும் என்பது மட்டும் உறுதி.

பிரதமரைச் சந்தித்து வலியுறுத்துவது, இந்திய குடியரசு தலைவரைச் சந்தித்து வலியுறுத்துவது, ஒய்வுப் பெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைத்து அறிக்கை தயாரித்து அளிப்பது போன்ற ஸ்டாலினின் இந்த அணுகுமுறை வெற்றி பெற்றால் அவரின் அரசியல் கணக்கு மட்டுமல்ல அவரின் அனைத்து விடயங்களும் வெற்றிப் பெற்று தமிழகத்தின் அரரசியல் ஆளுமையாக வலிமையாக வலம் வரலாம்.