ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இலங்கைக்கு மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி இந்தத் தொடர் செப்டெம்பர் முதலாம் திகதி ஹம்பாந்தோட்டை, மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் ஆரம்பமாகும் என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதிபடுத்தியுள்ளது.

"பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை இலங்கையில் நடத்துவோம்" என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஊடக தொடர்பாளர் ஹிக்மத் ஹசன் சனிக்கிழமை கிரிக்பஸிடம் உறுதிபடுத்தியுள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குறித்த தினங்களில் மைதானங்கள் கிடைக்காத காரணத்தினால் இந்த தொடர் இலங்கைக்கு மாற்றப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை நடத்துமாறு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமானை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முன்னதாக கோரிக்கை விடுத்தது.

எனினும் வரவிருக்கும் போட்டிகளின் காரணமாக இரு நாடுகளும் அந்த கோரிக்கையினை ஏற்க மறுத்து விட்டது.

2021 ஐ.பி.எல். தொடரின் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் மாதத்தில் விளையாடப்படும் என்று பி.சி.சி.ஐ. ஏற்கனவே அறிவித்துள்ளது.

அதே நேரத்தில் 2021 ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமானிலும் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.