ஸ்பெயின் பாராளுமன்ற கூட்டம் கடந்த புதன்கிழமையன்று நடைபெற்ற போது, முக்கிய விடயமொன்று இடம்பெற்றுள்ளது. 

பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் மேலவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் வாக்களிக்க இருந்த நிலையில், சட்டென பாராளுமன்றத்திற்குள் எலி ஒன்று நுழைந்துள்ளதால், உறுப்பினர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 

குறித்த எலி, பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் கால்களுக்குள் அங்கும் இங்குமாக ஓடியதால், எப்போதும் அமைதியாக விறுவிறுப்புடன் இயங்கும் பாராளுமன்ற கூட்டத்தை சிறிது நேரம் ஒத்திவைக்க நேர்ந்தது.

அதன்பின்னர் அவையில் ஒரு உறுப்பினர் பேச ஆரம்பிக்கவே, மீண்டும் எலி குறுக்கே ஓடியது. இதைக் கண்டதும் அந்த உறுப்பினர் முகக்கவசம் போட்டபடியே கூச்சலிட்டுக் கொண்டு ஓடும் வீடியோ காட்சிகள் அங்குள்ள கெமராக்களில் பதிவாகி உள்ளன.

பின்னர் ஒரு வழியாக அவைத் துணைத் தலைவர் ஜுவான் மரின் எலியைப் பிடித்து அப்புறப்படுத்தினார். இதற்கு பிறகு மீண்டும் பாராளுமன்றம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

ஒரு எலியால், பாராளுமன்ற கூட்டத்தை சிறிது நேரம்  ஒத்திவைக்க நேர்ந்தமை, அங்குள்ளோரிடையே வேடிக்கையாக பேசப்பட்ட விடயமாக காணப்பட்டது.