இரண்டு முறை நடப்பு சாம்பியனான ஆண்டி முர்ரே டோக்கியோ ஒலிம்பிக்கின் ஒற்றையர் டென்னிஸ் பிரிவிலிருந்து விலகியுள்ளார்.

ஒலிம்பிக் 2020 ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. டென்னிசில் ஏற்கனவே ஆண்கள் இரட்டையர் ஆட்டங்கள் நடந்த நிலையில் தற்போது ஆண்கள் ஒற்றையர் ஆட்டங்கள் நடக்க உள்ளன. 

இந் நிலையில் பிரிட்டன் வீரர் ஆண்டி முர்ரே ஒற்றையர் டென்னிஸ் பிரிவில் திடீரென வெளியேறி உள்ளார்.

இவரின் தொடையில் ஏற்பட்ட சிறிய சதை காயம் காரணமாக ஆண்டி முர்ரே வெளியேறுவதாக அறிவித்துள்ளார். ஆனால் இவர் தொடர்ந்து இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் ஆடுவார்.

கடந்த சனிக்கிழமை இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் ஜோ சலிஸ்பரியுடன் இணைந்து கனடா அணிக்கு எதிராக ஆண்டி முர்ரே வெற்றிபெற்றார். ஆண்டி முர்ரே தொடையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக அவர் ஏதாவது ஒரு பிரிவில் மட்டுமே ஆடுவது நல்லது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து ஒற்றையர் பிரிவில் இருந்து வெளியேற்றிவிட்டு இரட்டையர் பிரிவில் தொடரும் முடிவை ஆண்டி முர்ரே எடுத்துள்ளார். 

கடந்த 2012 மற்றும் 2016 ஒலிம்பிக்கில் முறையே லண்டன், ரியோவில் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றவர் ஆண்டி முர்ரே.