(லியோ நிரோஷ தர்ஷன்)

யாழ். இந்திய கலாச்சார மையத்தை பொறுத்த வரையில் டெல்லியின் மிக முக்கிய திட்டங்களில் ஒன்றாகவே அமைந்துள்ளது. எனவே தான் பாராத பிரதமர் நரேந்திர மோடி திறப்பு விழாவில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

திறப்பு விழாவுடன் தொடர்ப்புப்பட்டுள்ள அனைத்து விடயங்களிலும் இந்தியா முன்னின்று ஏற்பாடுகளை செய்து வருகின்ற இதேவேளை , கலாச்சார மையத்தின் நிர்வாகம் மற்றும் பராமரித்தல் போன்ற விடயங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இரு தரப்பு கலாசார உறவுகளை வலுப்பத்துவதில் யாழ். இந்திய கலாச்சார மையம் முக்கிய பங்கு வகுகிக்கும். அதே போன்று இலங்கையுடனான ஏனைய துறைசார் இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதிலும் இந்த மையம் ஒரு மைல்கல்லாக அமையும் என்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பாகின்றது. எனவே அனைத்து விடயங்களிலும் இருதரப்பு புரிதலுடன் செயற்படுவதில் டெல்லி மிகுந்த ஆர்வமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். இந்திய கலாச்சார மையத்தின்  நிர்மாண பணிகள் யாவும்  சுமார் ஓராண்டுக்கு முன்பே நிறைவடைந்துள்ளன. இந்த மண்டபவத்தின் திறப்பு விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதற்கான உத்தியோகப்பூர்வ அழைப்பை எற்கனவே விடுத்துள்ளார். இந்நிலையில் நிச்சயம் பாரத பிரதமர் இலங்கை வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. அதற்கு முன்னர் டெல்லி சிறப்பு குழுவொன்றை  கொழும்பிற்கு வருகை தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2015 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பிரதமர் நரேந்தி மோடியின் யாழ்ப்பாண விஜயத்தின் போது இந்த கலாசார மையம் குறித்து அறிவிக்கப்பட்டது. 1.6 பில்லியன் இந்திய நிதியுதவியின் கீழ் 2016 ஆம் ஆண்டு  கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் யாழ்.இந்திய கலாசார மையத்தை திறப்பு விழாவிற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த விழாவை மிக சிறப்பாக செய்து விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் டெல்லி உள்ளது. குறிப்பாக உலக புகழ் இசைக்கலைஞர்கள் மற்றும் டெல்லியின் முக்கிய பிரமுகர்கள் என பலருக்கம் அழைப்பு விடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிலையில் தென்னிலங்கையிலிருந்து பல அரசியல் பிரமுகர்கள் யாழ்ப்பாணத்திற்கு சென்று யாழ்.இந்திய கலாசார மையத்தை  பார்வையிட்டுள்ளனர். அண்மையில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும் சென்றிருந்தார்.

பல எதிர்பார்ப்புகளுடன் காணப்படும் யாழ்.இந்திய கலாசார மையத்தின் நிர்வாக அதிகாரங்கள் குறித்து கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வடக்கு மாகாண சபையின் கீழ் குறித்த யாழ்.இந்திய கலாசார மையம் காணப்பட வேண்டும் என்பது அரசாங்கத்தின் கோரிக்கையாக உள்ளது. ஆனால் யாழ்ப்பாணத்தின் துணைத்தூதரகம் ஊடாக அதன் நிர்வாக பணிகள் அமையப்பெற வேண்டும் என்பது நிலைப்பாடாகியுள்ளது. எவ்வாறாயினும் டெல்லியின் இறுதி தீர்மானம் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.