(எம்.மனோசித்ரா)

நாட்டில் டெல்டா தொற்று பரவல் அதிகமாகக் காணப்படலாம் என்று சுகாதார தரப்பு எச்சரித்துள்ளது. 

எனவே போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தாலும் முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட அடிப்படை சுகாதார விதிமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றுமாறும் குறிப்பாக சகலரையும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறும் வைத்திய நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

டெல்டா தொற்றுக்கு உள்ளானவர்கள் இனங்காணப்பட்ட பிரதேசங்களிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள பல மாதிரிகள் சந்தேகத்திற்கிடமானவையாகக் காணப்படுவதால் சமூகத்தில் மேலும் டெல்டா தொற்றாளர்கள் காணப்படக் கூடும் என்று சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் பட்டுவந்துடாவ தெரிவித்தார்.

சமூகத்தில் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்படக் கூடும் என்று சந்தேகிப்பதால் ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தவிர்ந்த கொழும்பு இரசாயன ஆய்வுகூடம் , கண்டி , கராப்பிட்டிய, அநுராதபுரம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய பொது வைத்தியசாலைகளிலும் டெல்டா தொற்றைக் கண்டறிவதற்கான ஏற்பாடுகளை சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ளதாகவும் வைத்தியர் பட்டுவந்துடாவ தெரிவித்தார்.

இரு வாரங்களில் 600 மரணங்கள் பதிவு

கடந்த இரு வாரங்களில் 611 கொவிட் மரணங்கள் இலங்கையில் பதிவாகியுள்ளன. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 353 ஆண்களும் , 258 பெண்களும் உள்ளடங்குகின்றனர். 

இவர்களில் ஐவர் 30 வயதுக்குக் குறைவானோராவர். இதே போன்று 147 பேர் 30 - 59 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதோடு , 459 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோராவர். 

இலங்கையில் முதலாவது கொவிட் பரவல் அலையில் 13 மரணங்களும் , இரண்டாவது அலையில் 596 மரணங்களும் , தற்போதைய மூன்றாவது அலையில் 3393 மரணங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழப்போரில் பெருமளவானோர் தடுப்பூசி பெறாதோர்

நாட்டில் இன்னும் கொவிட் அபாயம் நீங்கவில்லை. தொற்றாளர்கள் மற்றும் தொற்றினால் உயிரிழப்போர் எண்ணிக்கையில் சிறிய அதிகரிப்பை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. எனினும் பல மாவட்டங்களிலும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

எனவே 30 வயதுக்கு மேற்பட்டோர் இன்னும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாவிட்டால் துரிதமாக அதனைப் பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம். 

காரணம் தற்போது இலங்கையில் கொவிட் தொற்றால் உயிரிழப்பவர்களில் பெருமளவானோர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவர்களாகவே உள்ளனர் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றையதினம் பதிவான மரணங்கள்

இதேவேளை நேற்றைய தினம் 52 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன. இவ்வாறு உயிரிழந்தவர்களில் 26 ஆண்களும் 26 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இந்த மரணங்கள் நேற்று வெள்ளிக்கிழமை பதிவானவையாகும். அதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4054 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்

இந்நிலையில் இன்று சனிக்கிழமை மாலை 7 மணி வரை 1707 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இது வரையில் 294 820கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 266 665 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 23 666 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.