(எம்.மனோசித்ரா)

2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு இணையவழியூடாக விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

2020 உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லையை நாளைமறுதினம் திங்கட்கிழமை முதல் நீடிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு மாணவர்கள் சிக்கலை எதிர்கொண்டிருந்தமையால்  இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை கடந்த 18 ஆம் திகதியுடன் நிறைவடைந்திருந்தது. எனினும் அதற்கான கால எல்லையை நாளைமறுதினம் திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையபக்கத்திற்குள் பிரவேசித்து விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பித்த பின்னர் குறித்த விண்ணப்ப படிவத்தின் பிரதியொன்றைப் பெற்று அதில் கையெழுத்திட்டு அதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு apply2020@ugc.ac.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் குறித்த காலப்பகுதியில் மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடத்துறைகளை மாற்ற வேண்டிய தேவை ஏற்படுமாயின் , அதற்காக மேலும் இரு வாரங்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். 

இதற்காக இம்மாதம் 30 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படும். குறிப்பாக ஏற்கனவே விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது. 

நாளைமறுதினம் முதல் அடுத்த 5 நாட்களில் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு மாத்திரமே அதற்கான வாய்ப்பளிக்கப்படும் என்றார்.