மூவினம் போற்றும் முன்னைநாதன்

நித்திலம் எனப்போற்றும் முத்து
ரத்தினத்தீவாம் லங்கேஸ்வரம்
மேற்திசைபால் முனிகள் ஈஸ்வர
தவமேற்றிய முன்னேஸ்வர
திருத்தலம் முத்தலச்சிறப்பின்
மாண்பினை, முத்தமிழால்
நற்றமிழ் வித்தெனக்கொண்டு
பக்தர்கூட்டம் நித்தமும் போற்றும்
சக்தியுறை சிவமூர்த்தியும்
பக்தியுடன் அருளாசி வழங்கிடவே,,,,,

பஞ்சேஸ்வரனின் முதன்மை
பெற்ற திருத்தலம் முன்னேஸ்வரம்,
முன்னை நாதனை துதித்த
ராமகாவிய நாயகன் ஸ்ரீராமனும்
மாபாரத காவியம் எழுத்திட்ட ஒற்றைக்
கொம்பன்,திருவாக்கினால் மொழிந்த
வியாசனையும் ஆட்கொண்ட முன்னையம்பதி,,,,,

முன்னேஸ்வர அந்தாதி, கோகில சந்தேசய வரிகளின் வரலாற்றுச்சுவடுகள்
சான்றுடன் சரித்திரம் கண்ட நூல்கள் போற்றிடவே,,,,,

பராக்கிரமம் பூண்ட குலத்தோன் வழி வந்த பராக்கிரம மன்னர்களுடன்
பொற்கோல் கொண்ட நேர்த்தி மிகு மன்னனாம் கீர்த்தி ஸ்ரீ ராஜசிம்மன் திருத்தொண்டுபுரி
நற்கோவில்தனில் திருப்பணியே
அறப்பணி என நிறையுடன்
குறைவிலா குளக்கோட்டன்
அறுபத்துநான்கு திருவூர்தனை
முன்னைநாதன் பொற்பாதம்
தத்தம் செய்த திருவாலயம் எனச்
சான்றோர் புகழுரைக்க, அழகன் சிவனார்

சிவகாம சுந்தரனாய் அழகு திருமேனியுடன்அழகு செய் அழகேஸ்வரம் என திருநாமம்
ஏற்றி,அடியார் தீவினை அகற்றி,
நல்வினை காத்திட அரண் நல்கும் பஞ்சராஜ கோபுரத்துடன் விண்ணோக்கி ஒளியேற்றி,
புவிமாந்தர் வாழ்வதனில் எழுச்சியுற
இன்னருளை தன்னருளாக வாரி
வழங்கிடவே,,,,

தஞ்சைப் பெருவுடையான் திருத்தாழ் போற்றிய கங்கை கொண்ட
சோழபுரத்தான் செந்நெறி கொண்டு
எழுப்பிய கட்டிடக் கலைகள், வீரத்தமிழர்
கலைவண்ணம் பறைசாற்ற எடுத்தியம்பிய முன்னையவன் முன்னைநாத முத்தலம், மூவின மக்களின்
திருத்தலம்,சாதிமத பேதமின்றி
வேதநெறி தழைத்தோங்கிடவும் 

வீரத்தமிழனாம் வீணைக்கொடியோன் இராவணேஸ்வரன் செங்கொல் புரிந்த லங்கேஸ்வரம் வாழ் தமிழர் வாழ்வு குறைவிலாது சிறக்க
வேள்வி செய் முன்னேஸ்வர பெருமானே,,,,,

(ஆக்கம்:எஸ்.கணேசன் ஆச்சாரி சதீஷ் கம்பளை _உப செயலாளர் கம்பளை ஸ்ரீமுத்துமாரியம்மன் தேவஸ்தானம்)