(ஆர்.யசி)

மிகக் குறுகிய காலத்தில் அரசாங்கத்தின் மீதான மக்கள்  எதிர்ப்பு அலை அதிகரித்துக்கொண்டுள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் இராணுவ அடக்குமுறையை கையாளும் நிலை காணப்படுவதாகவும், மக்கள் உரிமைகளை கட்டுப்படுத்தும் சட்டங்களைக்கூட அரசாங்கம் உருவாக்கி வருவதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக தெரிவித்தார்.

இளம் ஊடகவியலாளர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர்களுடனான இணையவழி சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துக்களை பகிர்ந்துகொண்ட போதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

2019 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசாங்கம் மீது மக்களின் நம்மிக்கை இழக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் எதிர்ப்பும் வலுப்பெற்று வருகின்றது. 

கோட்டாபய  ராஜபக்ஷ பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தமை மற்றும் நல்லாட்சி அரசாங்கத்தின் பலவீனத்தன்மை காரணமாகவே 2019 ஆண்டில் கோட்டாபாய ராஜபக்ஷவிற்கும் பெரும்பான்மை ஆதரவு  கிடைத்தது. 

ஆனால் அரசாங்கம் மிகக் குறுகிய காலத்தில் மக்களின் நம்பிக்கையை இழக்கும் நிலைமை இன்று உருவாக்கியுள்ளது. பிரதானமாக முன்னரை விட மோசமான முறையில் குடும்ப ஆட்சி இப்போது வலுப்பெற்றுள்ளது. 

ஒரு நாடு ஒரு சட்டம் என்ற வாக்குறுதிகளை ராஜபக்ஷவினர் தவிடுபொடியாக்கிவிட்டனர். சாதாரண மக்களின் வாழ்வாதார பிரச்சினை பாதிக்கப்பட்டுள்ளது, அதேபோல் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி மிகப்பெரிய அதிர்ப்தியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் கடன் தொகை இன்று 16.6 ட்ரில்லியன் ரூபாவாகும். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர் 1 ட்ரில்லியன் பணம் அச்சடித்துள்ளனர். 

தேசிய கடன்களை விட சர்வதேச கடன்களில் நாம் நெருக்கப்பட்டுள்ளோம். வருமானத்தை விட கடன் தொகை அதிகமாக காணப்படுகின்றது. சர்வதேச கையிருப்பு பற்றாக்குறை மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதுடன் மேலும் கடன்களில் நாம் நெருக்கப்படும் நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளோம். 

அதேபோல் எமது வளங்களை விற்கும் நிலையொன்றும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும், சீனாவுக்கும் முக்கிய வளங்களை விற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதார வீழ்ச்சியின் தாக்கமே இவையாகும்.

இதனை சமாளிக்க ஜனநாயக விரோத செயற்பாடுகளை அரசாங்கம் கையாண்டு வருகின்றதுடன் மீண்டும் இனவாதத்தை கக்கும் நோக்கத்தில் செயற்பட ஆரம்பித்துள்ளனர். 

நாடாக மீண்டும் அடக்குமுறைக்குள்ளும், இனவாதத்தின் பக்கம் நாட்டை கொண்டுசெல்லவும்  நினைக்கின்றனர். மக்களை அடக்குவதற்கு சட்டங்களை உருவாக்கும் போக்கை கையாண்டும் வருகின்றனர். எனவே மாற்றமொன்று அவசியம், அதற்கான புதிய அணியொன்றை உருவாக்க வேண்டும். 

அடுத்த ஆட்சி என்னவென்று மக்களால் தீர்மானிக்க முடியாத குழப்பத்தில் உள்ளனர், ஆகவே புதிய மாற்றத்திற்கான அணியொன்றை உருவாக்க ஆக்கபூர்வமான செயற்பாடுகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.  

அரசாங்கம் தீர்வுகளை வழங்க முடியாத நிலையில் மக்கள் எதிர்ப்பு உருவாகும் வேளையில் ஆட்சியாளர் இராணுவத்தை இணைத்துக்கொண்டு ஆட்சியை கொண்டு செல்ல வழிவகுக்கும், இது நாட்டை  இராணுவ ஆட்சியின் பக்கம் கொண்டுசெல்லும். 

அவ்வாறான நிலையில் இருந்து நாட்டை மீட்டு ஜனநாயகத்தின் பக்கம் நாட்டை வழிநடத்தும் முயற்சிகளை நாம் முன்னெடுக்க வேண்டும். இந்த அரசாங்கத்தில் அரச துறைகளில்  இராணுவ அதிகாரிகள் பலர் உள்ளனர், மக்கள் எதிர்ப்பை கட்டுப்படுத்த  இராணுவத்தை பயன்படுத்தும் நிலையொன்று ஏற்படலாம். 

அதனை நாம் அனுமதிக்கக்கூடாது. நாட்டை நெருக்கடி நிலையை சமாளிக்க பணத்தை அச்சடித்து தீர்வுகான முடியாது,

மீண்டும் ஒரு கூட்டணியை கட்டியெழுப்பி  2015 ஆம் ஆண்டு போன்றே ஒரு பயணத்தை உருவாக்குவதில் எந்த பயனும் இல்லை, கொள்கை ரீதியில் மாற்றங்களை வகுத்து புதிய அணியொன்றை உருவாக்க வேண்டும். 

அதற்காக சகலருடனும் பேச நாம் தயாராக உள்ளோம். இதில் சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும். தேசிய இனமாக சகலரும் பிரிவினைவை கைவிட்டு பொருளாதார தடைகளை தகர்க்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 

பொருளாதாரம்  சகலருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை சகலரும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.