(எம்.மனோசித்ரா)

நாட்டிலுள்ள அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சங்கங்கள் சம்பள பிரச்சினை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 10 நாட்களுக்கும் அதிகமாக இணையவழி கற்பித்தல் செயற்பாடுகளிலிருந்து விலகியுள்ள நிலையில் , நேற்று வெள்ளிக்கிழமை முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரணதரத்திற்கான செயன்முறைப் பரீட்சை செயற்பாடுகளிலிருந்து விலகுவதற்கும் தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

பணிபகிஷ்கரிப்பை ஆரம்பித்த பின்னர் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் போராட்டத்தில் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கிச் செல்ல வேண்டியேற்படும் என்று நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம். அதற்கமைய இன்று (நேற்று) புதிய தீர்மானமொன்றை எடுத்துள்ளோம்.

அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கான செயன்முறைப்பரீட்சை மற்றும் ஏனைய பரீட்சை செயற்பாடுகளில் எந்தவொரு ஆசிரியரும் ஈடுபடாமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கும், கல்வி அமைச்சின் செயலாளருக்கும் ஆசிரியர் சங்கத்தின் அடிப்படையில் இந்த தீர்மானத்தை அறியத்தருகின்றோம் என்றார்.