டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்

கொரோனா தொற்று வேகமெடுத்த 2020 மார்ச் மாதத்திற்கு பிறகு ஒட்டுமொத்த உலகமும் ஒன்றுகூடியுள்ள மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டியின் 32 ஆவது போட்டி நேற்று ஜப்பானின் டோக்கியோ நகரில் ஆரம்பமானது. 

ஜப்பான் இதற்கு முன்னம் 1964 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்தியிருந்தது.

உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் வீர வீராங்கனைகள் பங்கேற்கும் ஒரே விளையாட்டுப் போட்டியாக கருதப்படுவது ஒலிம்பிக்தான். 

இத்தனைக்கும் சொந்த நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து நாடில்லாமல் அகதிகளாக இருக்கும் வீர வீராங்கனைகளைக் கூட ஒரு அணியக உருவாக்கி ஒலிம்பிக் கொடியின் கீழ் பங்குபற்ற செய்துள்ளது சர்வதேச ஒலிம்பிக் அமைப்பு.

இத்தனை சிறப்புக‍ளைப் பெற்ற ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா காரணமாக சற்று தொய்வு நிலையை அடைந்துள்ளது. 

கடும் கெடுபிடிகளுக்கு மத்தியில் வீர வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

2020 ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளானது கொரோனா காரணமாக ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டு நேற்று ஆரம்பமானது. 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கோலகலமாக ஆரம்பமானாலும் ஆரவாரமாக இருக்கவில்லை. காரணம் அதனை கண்டு களித்து கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த மைதானத்தில் பார்வையாளர்கள் எவரும் இல்லை.

கடும் சுகாதார கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஆர்பமான ஒலிம்பிக் விழாவை நிறுத்தக் கோரி. தொடக்க விழா நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையிலேயே மைதனத்திற்கு வெளியே மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடைபெற்றுக்கொண்டிருந்தமையும் அவதானிக்கூடியதாக இருந்தது.

மூடிய மைதானத்திற்குள் வீரர்களும் ஒலிம்பிக் ஏற்பாட்டுக்குழு அதிகாரிகளும் ஊடகவியலாளர்களும் மட்டுமே இருந்தனர். கிட்டத்தட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு 206 நாடுகளிலிருந்து 11 ஆயித்து 300 வீர வீராங்கனைகளோடு பயிற்சியாளர்கள் அதிகாரிகள் போட்டி மத்தியஸ்தர்கள் என எண்ணிக்கை இன்னும் நீள்கிறது. அத்தோடு 2000 ஆயிரத்திற்குமான ஊடகவியலாளர்களும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை செய்தியிட வருகை தந்துள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு எப்போதுமே பிரம்மாண்டமாகத்தான் இருக்கும். அதில் தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்துள்ள ஜப்பான் நடத்தும் டோக்கியோ ஒலம்பிக்கின் ஆரம்பமாக நிகழ்வும் ஜப்பானின் தொழில்நுட்பத்தையும் அவர்களின் புதுமையையும் பறைசற்றி நின்றது.

ஆனால் அதனை நேரடியாகக் காண ஜப்பான் நாட்டு மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒலிம்பிக் ஆரம்பமாவதற்கு முன்னமே கொரோனா பாதுகாப்புக்காகென டோக்கியோ நகரல் அவசரகால நிலைப் பிரகடனப்டுத்தப்பட்டது. 

முழு நகரமும் வெறிச்சோடிக் காணப்படும் நிலையில் ஒலிம்பிக்கில் பங்கேற்க வந்தவர்கள்தான் ஆங்காங்கே நின்றதை அவதானிக்க முடிந்தது. 

ஆனாலும் அவர்களும் தங்கள் விருப்பப்படி எங்கும் செல்ல முடியாது. அவர்களுக்கான மைதானம் அவர்கள் தங்கியுள்ள ‍ஹோட்டலைத் தவிர வேறு எங்கும் செல்ல அனுமதியில்லை, பொதுப் போக்குவத்தை பயன்படுத்தவும் அனுமதியில்லை.

கொரோனாவால் துவண்டுபோயுள்ள ஒட்டுமொத்த உலகிற்கும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஒரு புது பிரவேசத்தைக் கொடுத்துள்ளது எனலாம். 

இதனையே ஒலிம்பிக் தொடக்க விழாவிலும் அவர்களின் தொனிப்பொருளாக இருந்தது. புதிய நம்பிக்கை ஒட்டுமெத்த உலகின் நாளைய இலக்கு என்பவற்றை வலியுறுத்தின.

இன்று களம் காணும் நம்மவர்கள்

ஒலிம்பிக் போட்டிகளின் முதல்நாளான இன்று இலங்கை வீரர்கள் மூன்று போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.

அதன்படி முதலாவது மகளிர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தெஹானி 10 மீற்றர் எயார் ரைவல் பிரிவில் போட்டியிடுகிறார்.

அடுத்ததாக நீச்சல் போட்டியில் மெத்தியூ அபேசிங்க மற்றும் அனிகா கபூர் ஆகியோர் போட்டியிடுகின்றார். பட்மின்டன் போட்டியில் நிலூக கருணாரத்ன பங்கேற்கின்றார்.