(நா.தனுஜா)

இலங்கையின் கடற்பிராந்தியத்தில் தீப்பரவலுக்குள்ளாகி, தற்போது கடலுக்குள் மூழ்கியிருக்கும் எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்து எண்ணெய்க்கசிவு ஏற்பட ஆரம்பித்திருப்பதாக எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. 

அதிலிருந்து எண்ணெய்க்கசிவு ஏற்படுவது உண்மையானால், எவ்விதத்திலும் மதிப்பீடு செய்யமுடியாதவாறான சுற்றுச்சூழல் மாசடைவிற்கு எமது நாடு முகங்கொடுக்கவேண்டியேற்படும் என்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

விவசாயிகள் எதிர்கொண்டிருக்கும் உரப்பிரச்சினை, எரிபொருள் விலையேற்றம், ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புச் சட்டமூலம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக 'அடக்குமுறைக்கு அடிபணிய மாட்டோம்.

நாட்டை அழிக்கும் ஒடுக்குமுறை அரசாங்கத்தை விரட்டுவோம்' எனும் தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தியினால் நேற்று முன்தினம் வியாழக்கிழமை ஹோமாகமவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

'புத்திஜீவிகளைக் கொண்ட அரசாங்கம்' என்றுகூறி தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிபீடமேற்றிய 'வியத்மகவை' சேர்ந்த பிரதிநிதிகளிடம் ஒன்றைக் கேட்க விரும்புகின்றோம்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் எண்ணெய்க்கசிவு ஏற்பட ஆரம்பித்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் உண்மையானவையா? ஆமெனின், அதனாலேற்படக்கூடிய சூழல் பாதிப்புக்கள் மற்றும் வாழ்வாதாரப்பிரச்சினைகளுக்குப் பொறுப்புக்கூறப்போவது யார்? இந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதில்கூறவேண்டியது அவசியமாகும் என்று குறிப்பிட்டார்.