குமார் சுகுணா
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவின் 46 ஆவது பிறந்தநாள் இன்றாகும். அவரது வளர்ச்சியை திரும்பி பார்த்தால் வியப்பாகத்தான் உள்ளது.
நடிகர் சிவ குமாரின் மகன் என்ற போதிலும் அவர் திரை உலகுக்கு வந்தபோது பெரும் சவால்களை சந்திக்க நேரிட்டது. அவர் மீதான எதிர் மறையான விமர்சனங்கள் அதிகம் வந்தன.
அவரது தோற்றத்தை சிலர் கிண்டல் செய்தனர். நடிக்கத் தெரியாது.. நடனம் ஆட தெரியாது என்றெல்லாம் பல விமர்சனங்கள் வந்தன. ஆனால், அனைத்து விமர்சனங்களையும் தனது திறமை மூலமாக சாதனைகளாக மாற்றினார் சூர்யா.
எந்தவொரு திரையுலக முன்னனுபவமும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் காலடி எடுத்து வைத்து, ஒரு சிறந்த நடிகருக்கு தேவையான அனைத்து திறமைகளையும் குறுகிய காலக்கட்டங்களிலேயே வளர்த்து கொண்டு, இன்றைய முன்னணி நடிகர்களுள் ஒருவராகத் திகழ்பவர் இவர்.
நடிகரென்ற பெருமையோ, மமதையோ சிறிதளவும் இல்லாத சிவகுமார் தனது பிள்ளைகளையும் அவ்வாறே வளர்த்தார் என்பதற்கு சூர்யா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
வணிகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், ஆடை தயாரிப்புத் தொழிற்துறை மீது மிகுந்த ஆர்வமுடையவராகக் காணப்பட்டதால், ஒரு முன்னணி நடிகரின் மகனென்ற அங்கீகாரத்தை வெளிக்காட்டாமல், ஒரு தொழிற்சாலையில் மாதம் எட்டாயிரம் ரூபாய் சம்பளத்திற்குச் சேர்ந்தார்.
ஆறு மாதங்கள் அங்கு பணியாற்றிய அவரை, இயக்குனர் வசந்தின் படத்திற்கு ஒப்பந்தம் செய்யவே, அவ்வேலையில் இருந்து விலகிக் கொண்டார்.
தமிழ்த் திரையுலகில் இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பிலும், இயக்குனர் வசந்த்தின் இயக்கத்தில் உருவான ‘நேருக்கு நேர்’ திரைப்படம் மூலமாகத்தான் சினிமாவுக்கு அறிமுகமானார்.
1997இல் வெளியான இப்படத்தில், நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்திருப்பார், இதற்கு பின் பல படங்கள் நடித்தாலுத் நந்தா திரும்பி பார்க்க வைத்தது.
பாலா இயக்கத்தில் வெளிவந்த நந்தா திரைப்படம் முற்றிலும் சூர்யாவின் தோற்றத்தை மாற்றியது.
சூர்யாவால் இப்படியும் நடிக்க முடியுமா? என்று இரசிகர்கள் வியந்த நிலையில் கெளதம் மேனன் இயக்கத்தில் காக்க காக்க படத்தில் அன்புச் செல்வன் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடித்து மிரட்டினார். கெளதம் மேனன், சூர்யா கூட்டணி மேஜிக் கூட்டணி ஆனது.
பேரழகன் திரைப்படத்தில் சின்னா கதாபாத்திரத்திற்கு உடலில் ஊனம் இருந்தாலும் அதன் நம்பிக்கை நம்மை எல்லாம் ஈர்த்தது.
கஜினி திரைப்படம் மூலம் நடிப்பில் வேறு உச்சத்துக்கு சென்றார் சூர்யா. வாரணம் ஆயிரம் காதலர்கள் இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த சூர்யா இறுதியாக சுதா கொங்காராவின் இயக்கத்தில் சூரரைப்போற்று படத்தில் நடித்தார். இது ஒஸ்கார் போட்டிக்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.
தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திலும் நடித்து வருகின்றார்.
2003 இல் சிறந்த நடிகருக்கான ‘ஐடிஎப்ஏ (ITFA) விருதை’, ‘காக்க காக்க’ திரைப்படத்திற்காகப் பெற்றார். அப்படி தொடங்கிய விருது வேட்டை, அவரது சூரரைபோற்றுத் திரைப்படம் ஒஸ்கார் விருது போட்டிக்கு நுழைந்தது.
சூர்யா மிக சிறந்த நடிகர் என்பதோடு அவர் மிக சிறந்த சமூக செயற்பாட்டாளர் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நடைபெறும் சமூக அநீதிகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றார்.
2019 ஆம் ஆண்டில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்விக் கொள்கையையும், அதில் இடம்பெற்றிருந்த மும்மொழிக் கொள்கையையும் கடுமையாக எதிர்த்த சூர்யா, அது தொடர்பாக பல்வேறு கேள்விகளையும் எழுப்பியிருந்தார்.
அந்தச் சமயத்தில் பா.ஜ.க. வினர் பலரும், `சூர்யாவுக்கு ஏன் இந்த வேலை' என்பது போன்ற எதிர்க்கருத்துகளைப் பதிவுசெய்தனர்.
சூர்யாவின் `காப்பான்' பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ரஜினி, புதிய கல்விக் கொள்கை குறித்து ரஜினிகாந்த் பேசியிருந்தால் பிரதமர் மோடி கேட்டிருப்பார் என்றார்கள் சிலர்.
ஆனால், சூர்யா பேசியதே மோடிக்குக் கேட்டிருக்கிறது. புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் நானும் சூர்யாவின் கருத்துகளை ஆமோதிக்கிறேன் என்றார்.
சூர்யாவின் கருத்தை ரஜினி ஆதரிப்பதாகத் தெரிவித்ததை அடுத்து, புதிய கல்விக் கொள்கை தொடர்பாக சூர்யா முன்வைத்த கருத்துகள் இந்திய அளவில் கவனம்பெற்றன.
நீட் தேர்வு காரணமாக மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, “நீட் போன்ற மனுநீதித் தேர்வுகள், எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமன்றி உயிர்களையும் பறிக்கின்றன” என்று காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார் சூர்யா.
அகரம், அறக்கட்டளை மூலம் ஏழை, எளிய மாணவர்களின் கல்விக் கனவை நிறைவேற்றிவரும் நடிகர் சூர்யா, அதே ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை நசுக்கும் நீட் தேர்வை வெகு நாட்களாக வலுவாக எதிர்த்து வருகிறார்!
சமீபத்தில் நீட் தேர்வின் பாதிப்புகளை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது தமிழ்நாடு அரசு.
இதைனையடுத்து நீட் தொடர்பாக மீண்டும் ஓர் அறிக்கையை வெளியிட்டார் சூர்யா. அதில்,
“ஏழைகளுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும், பணம் படைத்தவர்களுக்கு ஒருவிதமான கல்வி வாய்ப்பும் இருக்கிற சூழலில், தகுதியைத் தீர்மானிக்க ஒரே தேர்வு முறை என்பது சமூகநீதிக்கு எதிரானது. தங்கள் எதிர்காலத்துக்காக 12 ஆண்டுகள் பள்ளிக் கல்வி படித்த பிறகும் நுழைவுத்தேர்வு மூலமாகவே உயர்கல்வி செல்ல முடியும் என்பது கல்வித் தளத்தில் அவர்களைப் பின்னுக்குத் தள்ளும் சமூக அநீதி'' என்று குறிப்பிட்டதோடு, ஏ.கே.ராஜன் குழுவுக்கு நீட் தேர்வு பாதிப்புகளை மின்னஞ்சல் மூலம் அனைவரும் அனுப்பிவைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார் சூர்யா.
கல்வி சார்ந்து மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்களுக்குத் தவறாமல் கருத்து தெரிவித்துவந்த சூர்யா, கல்வியைத் தாண்டி சுற்றுச்சூழல் சார்ந்த விவகாரங்களுக்கும் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அவருக்கு எதிராக பலத்த எதிர்ப்புகள் வந்த போதிலும் எதற்கும் துணிந்தவராகவே நிஜத்திலும் சூர்யா போராடி வருகின்றார். அண்மையில் சூர்யாவுக்கு எதிராக பா.ஜ.க.வினர் தீர்மானம்கூட நிறைவேற்றினர்.
சூர்யா ‘அகரம் பவுண்டேஷன்’ என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை நிறுவி, பொது நலனுக்காகவும், பாதியிலே கல்வியை விட்ட ஏழைக் குழந்தைகளின் கல்விக்காகவும் தன்னலமற்ற தொண்டாற்றி வருவது போல, புலிகளைக் காக்கப் பிரசாரம் மேற்கொண்ட அவர், காசநோயாளிகளுக்கு இலவச சிகிச்சையும் வழங்கி வருகிறார்.
இலாப நோக்கமற்ற அவரது தொண்டு நிறுவனத்தால், இதுவரை நூற்றுக்கணக்கான ஏழைக் குழந்தைகள் கல்விச் செல்வம் பெற்று, பயனடைந்து வருகின்றனர்.
சூர்யா கருத்துக்களை கூறுவதில் மட்டும் அல்ல, களத்தில் இறங்கி செயலில் ஈடுப்படுவதிலும் ஹீரோதான். உண்மையில் சூர்யா திரையில் மட்டும் அல்ல, திரைக்கு வெளியேயும் காப்பான்தான்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM