(நா.தனுஜா)

நீர்கொழும்பு சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதிகளில் கொவிட் - 19 தடுப்பூசி வழங்கல் செயற்திட்டத்தின் கீழ் நூற்றுக்கு 80 சதவீதமானோருக்கு முதலாம்கட்டத் தடுப்பூசிகளை வழங்கும் பணிகள் பூர்த்திசெய்யப்பட்டிருப்பதாக கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.

 

நீர்கொழும்பு சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைப் பிரிவில் 102,359 பேர் கொவிட் - 19 தடுப்பூசியைப் பெறுவதற்குத் தகுதிபெற்றிருப்பதுடன் அவர்களில் 82,367 பேருக்கு அஸ்ட்ராசெனேகா, சைனோபாம் ஆகிய தடுப்பூசிகளில் ஏதோவொன்று முதலாம்கட்டத் தடுப்பூசியாக வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை அப்பகுதியில் 17,100 பேர் இரண்டாம்கட்டத் தடுப்பூசியையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

 

சுற்றுலா மற்றும் மீன்பிடித்துறை நடவடிக்கைகளை மிகமுக்கிய வாழ்வாதாரத்துறையாகக்கொண்ட நீர்கொழும்பு பிரதேச மக்களுக்கு இயலுமானவரை விரைவாக கொவிட் - 19 தடுப்பூசியை வழங்குவதன் மூலம், அவர்கள் எவ்வித அச்சமுமின்றி தமது தொழிலைத் தொடர்ந்து முன்னெடுப்பதனை உறுதிப்படுத்த முடியும் என்றும் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அதன்படி எதிர்வரும் சில தினங்களுக்குள் நீர்கொழும்பு சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரிவிலுள்ள பகுதிகளில் வசிக்கும் அனைவருக்கும் முதலாம் கட்டத் தடுப்பூசியை வழங்கி முடிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும், அதற்கு சுகாதாரப்பிரிவினாலும் பாதுகாப்புப்பிரிவினாலும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டுவரும் ஒத்துழைப்புக்களுக்கு நன்றியை வெளிப்படுத்துவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.