(எம்.மனோசித்ரா)

மாகாணங்களுக்கிடையிலான பஸ் மற்றும் புகையிரத போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகும் என்று போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் , நீக்கப்படாவிட்டாலும் மாகாணங்களுக்கிடையில் குறிப்பிட்டளவு பஸ் மற்றும் புகையிரத போக்குவரத்துக்களை முன்னெடுப்பதற்கு கொவிட் குழு எமக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால் அனுமதியுடைய சகலருக்கும் மாகாணங்களுக்கிடையில் பயணிக்க முடியும். 

எனினும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்படாவிட்டால் நாம் அனுமதி வழங்கும் பஸ் மற்றும் புகையிரதங்களுக்கு மாத்திரம் பயணிக்க அனுமதி வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்.