(எம்.மனோசித்ரா)

நாட்டில் வாகன விபத்துக்களால் இன்று வெள்ளிக்கிழமை காலை 06.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 6 பேர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களாவர். மேலும் இருவர் பாதசாரிகள் என்பதோடு , எஞ்சிய நபர் முச்சக்கரவண்டியில் பயணித்தவராவார்.

தற்போது சிறிய ரக வாகனங்களிலும் வீதிகளில் செல்பவர்களும் வாகன விபத்துக்களில் அதிகளவில் உயிரிழக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு நேற்று வியாழனன்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 45 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்துக்களைக் குறைத்துக் கொள்வதற்காக போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு சலரிடமும் கேட்டுக் கொள்கின்றோம் என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.