விசாரணைகளுக்கு முகங்கொடுக்கும் விவசாய தொழிலதிபரின் கதை

Published By: Gayathri

23 Jul, 2021 | 11:16 AM
image

சிக்கலைத் தூண்டும் கருத்துக்களை வெளியிட்டார், பொது ஒழுங்கைக் குழப்பும் வகையில் செயற்பட்டார் மற்றும் சட்டவிரோத நிதி திரட்டலை முன்னெடுத்தார் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்துள்ள விவசாய தொழிலதிபரின் வழக்கு விசாரணைகள் வடக்கு சீனாவின் மூடிய நீதிமன்றத்தில் ஆரம்பமாகியிருக்கின்றது. 

வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அவர் மீது சட்டவிரோத சுரங்கங்கள் அமைத்தமை, அரச விவசாய நிலங்களை ஆக்கிரமித்துள்ளமை மற்றும் பொதுச்சேவைக்கு இடையூறு விளைவித்துள்ளமை ஆகிய குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேற்படி குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்பவர் 67வயதான தொழிலதிபர் ஷன் டவு. அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 25ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படலாம் என்று அவது தரப்பில் ஆஜராகியுள்ள சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். 

அவரது வழக்கானது சீனாவின் ஹெபீ மாகாணத்தில் உள்ள கியோபீடியன் மக்கள் நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. 

ஷன் டவு கடந்த ஆண்டின் நவம்பர் மாதம் தனது விவசாய மற்றும் கால்நடை பராமரிப்பு குழுவில் அங்கதவர்களாக இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வர்த்தக நண்பர்களுடன் சீன பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டார்.

ஊடகங்களுடன் பேச வேண்டாம், வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம், வணிக நிறுவனங்களில் தொடர்ச்சியாக சோதனைகள் நடைபெறுகின்றன என்று பொலிஸாரால் ஷன் டவுவுக்கு தெரிவிக்கப்பட்டிருந்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத அவருடைய சட்டத்தரணியொருவர் கூறியுள்ளதோடு, அவ்விதமான நிலைமையானது சில நாட்களுக்கு நீடிக்கும் என்றும் அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 

இந்த வழக்கை திறந்த நீதிமன்றத்தில் விசாரிக்குமாறு தொழிலதிபர் ஷன்னின் சட்டத்தரணிகள் குழுவொன்று கடந்த செவ்வாய்க்கிழமை பகிரங்கமான கோரிக்கையொன்றை விடுத்திருந்தது. அதுமட்டுமன்றி எழுத்துமூலமான கோரிக்கை ஒன்றையும் அக்குழு அனுப்பி வைத்திருந்தது.

இவ்வாறான நிலையில் ஷன் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகள் கடந்த வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையை பார்வையிடுவதற்காக ‘டவு’ குழுமத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் நீதிமன்றத்திற்குள் பிரவேசிக்க முயன்றார். 

இருப்பினும், நீதிமன்றத்தின் வாயில் மூடப்பட்டு தடுப்புக்கயிறுகள் போடப்பட்டு அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார். அதுமட்டுமன்றி அங்கு பொலிஸ் அதிகாரிகள் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டும் இருந்தனர்.

இதுபற்றி குறித்த ஊழியர் குறிப்பிடுகையில்,  

“நான் எனது நிறுவனத்தின் தலைவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வழக்கு விசாரணையைப் பார்வையிடுவதற்கே வந்தேன். ஆனால் அவர்கள் (பொலிஸார்) என்னை உள்ளே அனுமதிக்கவில்லை. 

எனது நிறுவனத்தின் தலைவருடைய உடல் நலம் மற்றும் அவருடைய நிலைமையைப் பார்வையிட்டுச் செல்லவே வந்துள்ளேன். அவர் தற்போது சட்டப்பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளார். இந்த நிலைமையில் அவருக்கு எனது வருகை ஆறுதலாக இருக்கும் என்றே கருதினேன்” என்றார். 

1954ஆம் ஆண்டு ஜுன் மாதம் பிறந்த ஷன் 1980களில் ‘டவு’ குழுமத்தை நிறுவினார். இந்தக்குழுமமானது விவசாயம், சுற்றுலா மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றில் 9,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட பாரியதொரு நிறுவனமாக அதனை மாற்றியமைத்தார். ஒருகாலத்தில் ‘விவசாயிகளின் நண்பன் ஷன்’ என்ற பெயரையும் பெற்றுக்கொண்டிருந்தார். 

படிப்படியாக விவசாயத்துறையில் வளர்ந்து வந்து தொழிலதிபரான ஷன், சீன அரசாங்கத்தின் கிராமப்புற கொள்கைகள் மற்றும் கொரோனா தொற்றுநோயைக் கையாளுதல் உள்ளிட்ட விடயங்களில் தனது விமர்சன ரீதியான கருத்துக்களை பகிரங்கமாக வெளிப்படுத்தலானார். 

இவ்வாறிருக்க, 2003ஆம் ஆண்டு வேகமான வளர்ச்சிகண்டு வந்த ஷன் சட்டவிரோத நிதி திரட்டல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார். 

அப்போது மனித உரிமைகள் தொடர்பான ஆர்வலர் ஜு ஷியோங்; உள்ளிட்ட முக்கிய சட்டத்தரணிகள் அவருக்காக ஆஜராகி அந்தக் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவித்திருந்தனர். 

தற்போது ஷன்னுக்காக ஆஜராகிய ஜு ஷியோங் ஜனாதிபதி ஷி ஜின்பிங் பதவி விலக வேண்டும் என்று கோரி பகிரங்கக் கடிதம் எழுதியமைக்காக கடந்த ஆண்டு பெப்ரவரி முதல் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில்தான் ஷன் விசாரணைகளுக்கு முகங்கொடுத்துள்ளார். ஷன்னைப் பொறுத்தவரையில், 300க்கும் மேற்பட்ட மனித உரிமை வழக்கறிஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டபோது அதற்கு எதிராக குரல் எழுப்பியுள்ளார். 

விசேடமாக 2015 ஆம் ஆண்டில், 709பேர் ஒடுக்குமுறையால் சிக்குண்டு நெருக்கடியைச் சந்தித்தவர்களுக்கு தனது முழுமையான ஆதரவினை வழங்கியிருந்ததோடு அதனை பகிரங்கமாகவும் செய்திருந்தார். 

இதனைவிடவும், ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் காரணமாக, தான் வாழும் பிராந்தியத்தின் பன்றிகள் மந்தைக்கு ஏற்பட்ட பாதிப்புக்களின் அளவை அரசாங்கம் மூடிமறைப்பதாக குற்றம் சாட்டிய அவர், 2019 ஆம் ஆண்டில் ஹெபீ பிராந்திய அரச அதிகாரிகளை பகிரங்கமாக விமர்சித்தும் இருக்கின்றார். 

இந்த பின்னணிகள் கூட அவரது தற்போதை நிலைமைக்கு காரணமாகியிருக்கலாம் என்ற சந்தேகங்களும் இல்லாமில்லை. எவ்வாறாயினும், தொழில்வாய்ப்புக்களை வழங்கி, நியாயத்துக்காக குரல் எழுப்பிய ஒருவர் தற்போது நீதிமன்றின் முன்னால் நிறுத்தப்பட்டிருக்கின்றார். 

சௌத் சைனா மோர்னிங் போஸ்டுக்காக குவோ ரூய்

தமிழில்: ஆர்.ராம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சமூக மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் திருநர்கள்!

2023-11-29 21:00:21
news-image

மூடு விழா காணும் வைத்தியசாலைகள்! :...

2023-11-29 17:29:24
news-image

கடன்களை பெறுவதற்கு பொருத்தமான காலமா?

2023-11-29 14:15:02
news-image

நிகழ்நிலை பாதுகாப்பா அல்லது சுதந்திரமான நிகழ்நிலைப்...

2023-11-29 16:26:25
news-image

2.3 மில்லியன் குழந்தைகள் உட்பட 5.7...

2023-11-29 12:44:11
news-image

பாதுகாப்பு கரிசனைகளை புறக்கணிக்கும் இலங்கையின் மாணிக்கக்...

2023-11-29 14:51:32
news-image

பெருந்தோட்ட மக்களின் 'முகவரி பிரச்சினைக்கு' நிரந்தர...

2023-11-28 11:59:25
news-image

 ஓய்வு பெற்ற பிறகும் ஓய்வூதியம் பெறாதிருக்கும்...

2023-11-28 11:20:13
news-image

தொழிற்சங்க செயற்பாடுகள் இனியும் சாத்தியப்படுமா? 

2023-11-28 11:41:09
news-image

பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப மக்களுடனான நம்பிக்கையை மீளக்கட்டியழுப்பவேண்டும்

2023-11-28 11:36:20
news-image

அரச வருமான இலக்கை அடைவதன் சவால்கள்

2023-11-27 17:53:39
news-image

2036 ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்களை நடத்தும் வல்லமை...

2023-11-27 17:49:39