முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் கடந்த 2015 - 2019 வரை வீட்டு பணிப்பெண்ணாக வேலைக்கமர்த்தப்பட்டிருந்த யுவதியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் ரிஷாத் பதியுதீனின் மனைவியின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இல்லத்தில் பணிக்கமர்த்தப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுமி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள விசேட பொலிஸ் குழுக்களால் 20 வாக்குமூலங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

இந்த 20 வாக்கு மூலங்களில் குறித்த சிறுமி ரிஷாத் பதியுதீன் இல்லத்திற்கு வீட்டுவேலைக்கு அமர்த்தப்படுவதற்க முன்னர் வேறு இரு பெண்கள் பணி புரிந்ததாக தெரியவந்துள்ளது. 

இந்த பெண்களையும் பொன்னையா பண்டாரம் என்ற தரகரே அழைத்து வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

குறித்த இரு பெண்களில் ஒருவர் தற்போது 32 வயதுடையவர் என்பதோடு , மற்றையவர் 22 வயதுடையவராவார். டயகம பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதியிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குமூலத்தில் அவர் 2015 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரை ரிஷாத் பதியுதீன் இல்லத்தில் வீட்டு பணிப்பெண்ணாக பணி புரிந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அவர் பணிப்பெண்ணாக பணிபுரிந்த போது இரு சந்தர்ப்பங்களில் நபரொருவரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போது அவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் முன்னாள் அமைச்சரின் மனைவியின் சகோதரரான 44 வயதுடைய மதவாச்சி பிரதேசத்தைச் சேர்ந்த ஷியாப்தீன் இஸ்மதீன் என்ற நபர் என்பது தெரியவந்துள்ளது.

அதற்கமைய குறித்த நபர் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பிலும் மேலதிக விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சிறுமியின் உயிரிழப்பு தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அப்பால் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறித்த பெண் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் அமைச்சராக பதவி வகித்த போது அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலேயே இவ்வாறு இரு சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

கொழும்பு - மெகசி வீதியிலுள்ள குறித்த உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்று இது தொடர்பில் விசாரணை அதிகாரிகளால் கண்காணிப்பு குறிப்புக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.