(நா.தனுஜா)

உத்தேச ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிராக வெளியிடப்பட்ட கருத்துக்களைத் தொடர்ந்து, அதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டுவருவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார். 

கொத்தலாவலை பல்கலைக்கழக சட்டமூலம் ஒட்டுமொத்த பல்கலைக்கழங்களுக்கும் பாரிய  அச்சுறுத்தல் - ஹரினி அமரசூரிய | Virakesari.lk

சிவில் பல்கலைக்கழகக் கட்டமைப்புக்களை நிர்வகிக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குக் கீழ் இராணுவப் பல்கலைக்கழகமொன்றை எவ்வாறு உள்நுழைக்கமுடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ள தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய, எனவே அரசாங்கம் உடனடியாக இந்தச் சட்டமூலத்தை மீளப்பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தை இராணுவப் பல்கலைகழகமாக முன்னெடுத்துச்செல்லப் போகின்றார்களா? அல்லது அனைத்து மாணவர்களுக்கும் உரிய சிவில் பல்கலைக்கழகமாக முன்னெடுத்துச்செல்லப் போகின்றார்களா? என்ற தீர்மானமிக்க கேள்விக்கு ஜனாதிபதி பதிலளிக்கவேண்டியது அவசியமாகும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக்காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.