(ஆர்.யசி)
இலங்கையில் தற்போது மக்களின் பயன்பாட்டிற்கு தேவையான எரிபொருள் தாராளமாக உள்ளது.  நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது. இலங்கையில் எரிபொருள் களஞ்சிய நிலையங்களில் முழுமையாக எரிபொருள் நிரப்பினாலும் எம்மால் ஒரு மாதத்திற்கான எரிபொருளையே சேமிக்க முடியும், எனவே இந்தியாவின் வசம் இருக்கும் எமது எண்ணெய் குதங்களில் 24 குதங்களை மீண்டும் பெற்றுக்கொள்ள இந்தியாவுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்ட பின்னர் அதனை முழுமையாக கையாளும் அதிகாரம் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கே உள்ளது. தற்போது கொவிட் நெருக்கடி நிலைமையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் விலை குறைவடைந்திருந்தது. இதற்கு கொவிட் வைரஸ் பரவலே காரணமாகும். உலக நாடுகள்  முடக்கத்தில் இருந்தமை காரணமாக எரிபொருள் விலை குறைவாக இருந்தது. பின்னர் நாடுகள் வழமையாக இயங்க ஆரம்பித்த பின்னரும், ஒபெக் அமைப்புக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாகவும் மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார்.