(நா.தனுஜா)
உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத் தாக்குதல்களின் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன்னால் நிறுத்துவதாக வாக்குறுதியளித்து ஆட்சிபீட மேறிய தற்போதைய அரசாங்கம், தற்போது அதற்கான அனைத்து வாய்ப்புக்களும் காணப்படும் சூழ்நிலையிலும் உரிய நடவடிக்கை எடுப்பதைத் தாமதிப்பதற்கான காரணமென்ன ? எனவே இவ்விடயத்தையும் மக்களின் உணர்வுகளையும் ஆளுந்தரப்பு வெறுமனே தமது அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறதா? என்ற சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன விசனம் வெளியிட்டுள்ளார்.

அதேவேளை,  தற்போதைய அரசாங்கம் பதவிக்குவந்து சிலகாலத்திற்குள்ளாகவே  கத்தோலிக்கத் தேவாலயங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை நாம் கடுமையாகக் கண்டனம் செய்வதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அண்மைக்காலத்தில் கத்தோலிக்க தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளவதற்கு அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பிலுள்ள  ஐக்கிய மக்கள் சக்தியின்  தலைமைக்காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.