(நா.தனுஜா)
அண்மையில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்டிருந்த ஹிஷாலினி என்ற சிறுமி உயிரிழந்திருக்கும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறுவதைத் தடுப்பதற்கு குறுங்கால மற்றும் நீண்டகால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் மலையகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட புத்திஜீவிகள் மற்றும் வர்த்தகர்கள் உள்ளிட்டோர் கூடி ஆராய்ந்திருப்பதுடன், அதனூடாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை விரைவில் நடைமுறைப்படுத்தவதற்கு அவசியமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்டிருந்த டயகமவைச் சேர்ந்த 15 வயதான ஹிஷாலினி தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்த சம்பவம் பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்திருக்கின்றது.
இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறுவதைத் தவிர்த்தல் மற்றும் இதற்கு குறுகியகால மற்றும் நீண்டகால அடிப்படைகளில் அடைந்துகொள்ளக்கூடிய தீர்வுகள் தொடர்பில் ஆராய்தல் ஆகியவற்றை அடிப்படை நோக்கமாகக்கொண்டு விவேகா பயிற்சி நிறுவனத்தின் ஸ்தாபகர் கே.ரி.குருசாமி மற்றும் பழ.புஷ்பநாதன் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்வொன்று நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள பிரைற்றன் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடல் நிகழ்வில் சிறப்புப் பேச்சாளர்களாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ஆர்.ரமேஷ், பேராசிரியர் எஸ்.சந்திரசேகரம், பேராசிரியர் மூக்கையா மற்றும் பேராசிரியர் ரி.தனராஜ் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன் கொழும்பு இந்துக்கல்லூரியின் முன்னாள் அதிபர் பரமேஸ்வரன், எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி செந்தில்நாதன், சட்டத்தரணி கமலதாசன், மலையத்தைப் பூர்வீகமாகக்கொண்ட தொழிலதிபர்கள், வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது வீட்டுப்பணிப்பெண்ணாக வேலைக்கமர்த்தப்பட்ட ஹிஷாலினியின் மரணத்தைப்போன்று இதற்கு முன்னரும் பல்வேறு சம்பவங்கள் பதிவாகியிருப்பது பற்றி சுட்டிக்காட்டப்பட்ட அதேவேளை, இனிவருங்காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதைத் தவிர்ப்பதற்கு மலையக சமூகத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இதுகுறித்து கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்த அனைத்துத்தரப்பினராலும் ஆலோசனைகளும் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டன.
அதனைத்தொடர்ந்து கருத்துவெளியிட்ட பேராசிரியர் தனராஜ், இவ்விடயத்தை உணர்வுபூர்வமாகக் கையாள்வதைவிடுத்து அறிவுபூர்வமாகக் கையாளவேண்டியதன் அவசியம் தொடர்பில் சுட்டிக்காட்டினார். கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் எழுத்தறிவு வீதம், தாமாக முன்வந்து தம்மை ஓர் சமூகமாக அடையாளப்படுத்திக்கொள்ளும் போக்கு, பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகும் மாணவர்களின் வீதம், அரச நிர்வாகசேவையில் அங்கம்வகிப்போரின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு விடயங்களிலும் மலையகம் அடைந்திருக்கக்கூடிய முன்னேற்றம் தொடர்பில் எடுத்துக்கூறிய அவர், இருப்பினும் மலையகத்தில் வறுமை என்பது மிகமுக்கிய பிரச்சினையாகக் காணப்படுவது பற்றியும் அதன்காரணமாக 18 வயது பூர்த்தியடைவதற்கு முன்னதாகவே பாடசாலைகளிலிருந்து இடைவிலகும் மாணவிகள் தமது குடும்பத்தின் தேவைக்காக வேலைக்குச்செல்ல நிர்பந்திக்கப்படுவது பற்றியும் குறிப்பிட்டார்.
எனவே இதற்கான தீர்வுகள் தொடர்பில் அவர் கூறுகையில், 'இவ்வாறானதொரு சூழ்நிலையில் அனைத்துத் தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்துக்கொண்டு மலையகத்தின் அனைத்துக் கிராமங்களிலும் காணப்படும் கோயில்களின் ஊடாகவோ அல்லது ஏதேனுமொரு பொதுக்கட்டமைப்பின் ஊடாகவோ அப்பகுதிகளிலுள்ள வறிய மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கு மாதாந்தம் நிதியுதவியை வழங்குவதற்கான சட்டபூர்வமான நிதியமொன்றை உருவாக்கவேண்டும். அதேபோன்று மலையகத்தைப் பூர்வீகமாகக்கொண்ட பெருவணிகர்கள் கொழும்பில் இருக்கின்றார்கள். அவர்கள் தமது கடைகளில் அல்லது வர்த்தக நிலையங்களில் மலையக இளைஞர், யுவதிகளுக்குப் பெருமளவில் வேலைவாய்ப்புக்களை வழங்குகின்றனர்.

இருப்பினும் அவர்கள் பெரியளவிலான தொழிற்சாலைகளை உருவாக்கி நடாத்தும்பட்சத்தில் ஒப்பீட்டளவில் மேலும் பலருக்கு வேலைவாய்ப்பை வழங்கமுடியும். அத்தோடு அரச பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகாத மாணவர்கள் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் தனியார் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் அதுகுறித்துப் போதியளவான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். மலையகத்தைச்சேர்ந்த பெருமளவானோர் கொழும்பில் தங்கிப்பணிபுரிந்துவரும் நிலையில், அவர்களுக்குக் குறைந்த செலவில் தங்குமிட வசதிகளை வழங்கக்கூடியவகையில் விடுதிகளை அமைக்கவேண்டு;ம் என்று சுட்டிக்காட்டிய அவர், இருப்பினும் அனைத்து மாணவர்களுக்குமான பாடசாலைக்கல்வியை உறுதிப்படுத்தி, அறிவுசார் மலையக சமூகத்தை உருவாக்குவதன் ஊடாகவே இப்பிரச்சினைக்கு நீண்டகால அடிப்படையிலான தீர்வைக்கண்டடைய முடியும் என்றும் அறிவுறுத்தினார்.
அவரைத்தொடர்ந்து இவ்விடயம் தொடர்பில் பேராசிரியர் சந்திரசேகரத்தினால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் வருமாறு,
மலையகத்திலிருந்து வேலைவாய்ப்பிற்காக, குறிப்பாக வீட்டுப்பணிப்பெண்களாக வருபவர்கள் தொடர்பில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகும் போது அவற்றைத் தனித்து ஒருகோணத்தில் மாத்திரமன்றி, ஒரேநேரத்தில் பல்கோணங்களில் கையாளவேண்டும். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்தல், மலையகத்தைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்குமான கட்டாயக்கல்வியை உறுதிப்படுத்தல், வீட்டுப்பணிப்பெண்ணாகச் செல்லும் கலாசாரத்தை மாற்றியமைத்தல், பிள்ளைகளை வலுவூட்டல் உள்ளடங்கலாக பல்வேறு கோணங்களிலும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். அதேபோன்று உதாரணத்திற்கு வடபகுதி மாணவர்களை எடுத்துக்கொண்டால், அவர்கள் கல்வியை ஓர் கலாசாரமாகக் கருதுகின்றார்கள். அதனையொத்த நிலையொன்று மலையகத்தில் உருவாக்கப்பட வேண்டும். மேலும் வறுமை உள்ளிட்ட பலதரப்பட்ட காரணங்களுக்காக மலையக மாணவர்கள் பாடசாலைக்கல்வியிலிருந்து இடைவிலகுவதைத் தடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் இதுபற்றிய தனது ஆலோசனைகளையும் அபிப்பிராயங்களையும் பகிர்ந்துகொண்ட பேராசிரியர் மூக்கையா, மலையகத்தின் வருங்கால சந்ததியின் மத்தியில் கல்வியையும் வாசிப்பையும் ஊக்குவித்து அவர்களது அறிவுமட்டத்தை மேம்படுத்துவதன் ஊடாகவே நீண்டகால அடிப்படையில் இத்தகைய பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும் என்ற விடயத்தை அழுத்தம் திருத்தமாகச் சுட்டிக்காட்டினார். அதேவேளை மலையக மக்களைப் பொறுத்தவரையில், பெருமளவானோர் தமக்குக் கிடைக்கின்ற நிதியை அநாவசியமான விடயங்களுக்கு முக்கியத்துவமளித்து வீணாக்குகின்றார்கள் என்று குறிப்பிட்ட அவர், சட்டத்தை இயற்றுகின்ற கட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஒருவர் சட்டத்திற்கு முரணானவிதத்தில் 15 வயதான சிறுமியை பணிப்பெண்ணாக வேலைக்கமர்த்துவதென்பது மிகவும் தீவிரமாகப் பார்க்கப்பட வேண்டிய விடயமாகும் என்றும் தெரிவித்தார்.
நிறைவாக இக்கலந்துரையாடலில் சிறப்பு ஆலோசகராகக் கலந்துகொண்டிருந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் ரமேஷ், ஹிஷாலினியின் மரணத்தைப் போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறுவதைத் தவிர்ப்பதற்கு அவசியமான சட்ட, சமூக மற்றும் சிந்தனை மறுசீரமைப்புக்கள் தொடர்பில் ஆழமான கருத்துக்களை முன்வைத்தார்.
அதன்படி மலையகத்திலிருந்து பெரும்பாலும் கொழும்பிற்கும் ஏனைய பகுதிகளுக்கும் வேலைக்குச் செல்லும் இளைஞர், யுவதிகளின் அனைத்து விபரங்களையும் சேகரித்து அவற்றை உரியவாறு பேணுவதற்கான தரவுத்தளமொன்றை உடனடியாக நிறுவுதல், 'வறுமை' என்ற விடயத்தைக் காரணமாகக்கூறி போதிய வசதிவாய்ப்பு உள்ளவர்களும்; தமது பிள்ளைகளை வேலைக்கு அனுப்புவதைத் தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தல், தோட்டக்கம்பனிகளுக்கும் அரச நிர்வாகக் கட்டமைப்புக்களுக்கும் இடையில் காணப்படும் தொடர்பை வலுப்படுத்தல், இலங்கையின் தொழிற்சட்டத்திற்குக் கீழ் உரியாறு வரையறுக்கப்பட்டுக் கண்காணிக்கப்படாமல் இருக்கும் வீட்டுப்பணிப்பெண் வேலையை முறைமைப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு கடிதங்கள் மற்றும் மகஜர்கள் மூலம் தொழிற்திணைக்களத்திற்கு அழுத்தம் பிரயோகித்தல், இலங்கையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் தொழிலாளர் உரிமை தொடர்பான சர்வதேச பிரகடனத்தை அடிப்படையாகக்கொண்டு, அதனையொத்த உள்நாட்டுச்சட்டத்தைப் பாராளுமன்றத்தின் ஊடாக நிறைவேற்றல், மலையகத்திலிருந்து வெளியிடங்களில் தொழில்புரிவோர் தொடர்பான தரவுகளைத் திரட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ளல், மலையக மாணவர்களுக்கு அவசியமான முறையான தொழிற்கல்வியை வழங்குவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் ஆகிய விடயங்கள் அவரால் முன்வைக்கப்பட்டன.
இவ்வாறான பலதரப்பட்ட ஆலோசனைகளும் பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான இறுதி செயற்திட்டங்களைத் தீர்மானிப்பதற்கான கூட்டத்தை எதிர்வரும் இருவாரங்களில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM