குமார் சுகுணா

எமது பெருமை நமது முன்னோர்கள்தான். நாம் தமிழர்கள் என்று மார்த்தட்டிக்கொள்வதற்கு மூல காரணம் அவர்கள்தான்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் செய்த சாதனைகளை  இன்று உலகம் அதிசயித்து பார்க்கின்றது. அந்த பெருமையே தமிழர் என்ற கர்வத்தை நமக்கு தருகின்றது.

அந்த வகையில்  புவி ஆண்ட சக்கரவர்த்திகள் எனும் பெருமைக்குரிய மன்னர்களை கொண்ட சோழசாம்ராஜ்ஜியத்தில் உலகம் வியக்கும் பல அதிசயங்கள் நடத்தப்பட்டன. அவற்றில் கட்டட கலையும் ஒன்று. சோழர்களின் மாமன்னன் ராஜராஜசோழனின் காலத்தில் கலைகள் அனைத்தும் மிக சிறப்பாக வளர்க்கப்பட்டன. இதற்கு சான்று  தஞ்சை பெரிய கோயில் ஒன்றே போதும்.

ராஜராஜ சோழனின் மகனும் அவரை போன்றவரே. தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவராவார். அவரது காலமும் பொற்கால ஆட்சியையே மக்களுக்கு வழங்கியது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டு இந்தியாவையும் கீழை நாடுகள் சிலவற்றையும் வெற்றிகொண்ட சோழ மன்னனான ராஜேந்திரச் சோழன், இந்தியத் துணைக் கண்டம் பார்த்த மகத்தான பேரரசர்களில் ஒருவர். இந்திய துணைக் கண்டத்தின் பிற மன்னர்கள் நிகழத்தாத சாதனைகளை நிகழ்த்தியவர்.

புலிக்கு பிறந்தது பூனையாகாது என்பது போல சோழர்களின் வரலாற்றில் ராஜராஜ சோழனை போல. அவருக்கு ஒரு படி மேலேயே சென்று தனது ஆட்சி பரப்பை சோழ சாம்ராஜ்ஜியத்தை  ராஜேந்திரச் சோழன் விஸ்தரித்தார்.  

இந்தியா மட்டுமல்லாமல், கடல் தாண்டிச் சென்று பல நாடுகளை வென்று, புதிய தலைநகரை நிர்ணயித்து தமிழர் வரலாற்றில் உன்னதமான ஓர் இடத்தைப் பெற்றவர்.

 ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தில், 1012லேயே இணை அரசனாக அறிவிக்கப்பட்டார். மதுராந்தகன் என்ற இயற்பெயரைக் கொண்டிருந்த அவன், அன்றுதான் அபிஷேக நாமமாக ராஜேந்திரன் என்ற பெயரைப் பெற்றார்.

தந்தை பேரரசனாகவும் ராஜேந்திரன் இளவரசனாகவும் செயற்பட்டனர். ராஜராஜ சோழனின் மறைவுக்குப் பிறகு, சோழ நாட்டின் மன்னனாக முடிசூடிக்கொண்டார் ராஜேந்திரச் சோழன். அப்போதிலிருந்து 1044வரை ராஜேந்திரச் சோழனின் ஆட்சியே நடைபெற்றது. ராஜராஜ சோழன் மறைந்தபோது தற்போதைய தமிழ்நாடு, ஆந்திராவின் சில பகுதிகள், மைசூர் ராஜ்ஜியத்தின் சில பகுதிகள், இலங்கை உள்ளிட்ட பகுதிகளை ராஜேந்திரச் சோழனுக்கு விட்டுச் சென்றார்.

"சோழர் வரலாற்றில் முதலில் மகத்தான மன்னனாக அறியப்பட்ட ராஜராஜ சோழனின் சாதனைகளுக்குப் பின்னணியாக இருந்தவர் ராஜேந்திரச் சோழன்தான். பஞ்சவன் மாராயன் என்ற பெயருடன் ராஜராஜசோழனின் மாதண்ட நாயகனாக இருந்து, படையெடுப்புகளை நடத்தி, எதிரிகளை கட்டுக்குள் வைத்திருந்தார். இன்றைய குடகு பகுதிகளில் தங்கியிருந்து சாளுக்கிய நாடு, கேரள நாடுகளை அடக்கினார். அதனால்தான் ராஜராஜ சோழன் அமைதியாக தஞ்சையில் ஆட்சி செய்ய முடிந்தது. ஆகவே, ராஜேந்திரனின் சாதனைகள் ராஜராஜசோழன் காலத்திலிருந்தே தொடங்குகின்றன, என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சோழர்கள் தங்களது வெற்றியை கொண்டாடும் வகையில் அதனை நினைவுப்படுத்தும் வகையில் ஆலயங்கள் அமைத்தனர். அந்தவகையில் கங்கை ஆறு வரை படையெடுத்துச் சென்று பாலப் பேரரசை வெற்றிகொண்ட முதலாம் ராஜேந்திரன், வெற்றி பெற்றதன் நினைவாக,  தன் தந்தை கட்டியக் கோயிலைப் போன்று தானும் ஒரு கோயில் கட்ட விரும்பினான். அதற்கிணங்க கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரத்தை முதலாம் ராஜேந்திரன் அமைத்து அங்கு  கங்கை கொண்ட சோழேஸ்வரத்தினை உருவாக்கினார். 

இது கங்கை கொண்ட சோழீஸ்வரம்  என்றும் அழைக்கப்படுகின்றது. ராஜேந்திர சோழன், மன்னனாக முடிசூடிய பிறகு தன் முன்னோர்களின் தலைநகரான தஞ்சாவூரில் இருந்தப்படி பத்து ஆண்டுகள்தான் ஆட்சி செய்தார். பின்னர் தஞ்சாவூரிலிருந்து தான் புதிதாக நிர்மாணித்த கங்கைகொண்ட சோழபுரம் ஊரைத் தனது தலைநகராக மாற்றினார். தொடர்ந்து அடுத்த 250 ஆண்டுகளுக்கு கங்கைகொண்ட சோழபுரமே சோழர்களின் தலைநகரமாக விளங்கியது.

வளமான தஞ்சாவூரிலிருந்து 50 கி.மீ. தூரத்தில் வறண்ட பகுதி ஒன்றில் கங்கை கொண்ட சோழபுரம் என்ற புதிய தலைநகரை நிர்மாணித்தார் ராஜேந்திரச் சோழன். இப்படிச் செய்ததற்குக் காரணம் யாதெனில், ராஜேந்திரச் சோழனின் காலத்தில் தஞ்சாவூர் ஒரு இராணுவக் கேந்திரமாக உருவெடுத்திருந்தது. படைகள் பெருகியிருந்தன. இவ்வளவு பெரிய படைகளை வளமான காவிரியின் வடிநிலப் பகுதியில் வைத்துக்கொண்டிருக்க முடியவில்லை. இதனால் கொள்ளிடத்திற்கு வடகரையில் ஒரு வறண்ட பெரும் பகுதியைத் தேர்வுசெய்து புதிய தலைநகரமாக உருவாக்கத் திட்டமிட்டார் ராஜேந்திரச் சோழன். எந்த தலைநகருக்கும் நீர்வளம் மிக முக்கியம் என்பதால் 20 மைல் நீளத்திற்கு ஒரு ஏரியை வெட்டி  அதன் கரையில் ஒரு பெரிய தலைநகரை உருவாக்கினார். அங்கு தஞ்சை அரண்மனையைப் போலவே ஒரு மிகப் பெரிய அரண்மனையைக் கட்டினார். அங்கே தஞ்சை பெரிய கோயிலைப் போலவே ஒரு கோயிலை உருவாக்கினான். இப்படியாகத்தான் 1025இல் கங்கை கொண்ட சோழபுரம் உருவானது. தஞ்சையிலிருந்த அனைத்தையும் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு மாற்றியதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அகழி, கோட்டைச் சுவருடன் கூடிய இந்த நகரம் 1,900 மீற்றர் நீளமும் 1,350 மீற்றர் அகலமும் உடையதாக இருந்தது. தஞ்சை பெருவுடையார் கோயிலைக் கட்டிய கட்டிடக் கலைஞர்களையும் சிற்பிகளையும் தஞ்சாவூரிலிருந்து இங்கு வரவழைத்து இக்கோயிலைக் கட்டச் செய்தார் என்றும் கருதப்படுகிறது.

இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும். இக்கோயில் சமூக, பொருளாதார, அரசியல் நிகழ்வுகளின் நடுவகமாக விளங்கியுள்ளது.

உலகப்பாரம்பரியச் சின்னமாக 2004-இல் கங்கைகொண்ட சோழேஸ்வரம் அறிவிக்கப்பட்டது. இது வெறும் கோயிலோ கட்டடமோ அல்ல. எமது முன்னோர்கள் எமக்கு விட்டு சென்ற பொக்கிசம். இதனை பாதுகாக்க  வேண்டிய கடமை பொறுப்பு நமக்கு உள்ளது. பாதுகாப்போம்.