(எம்.மனோசித்ரா)

அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்கிழமை கல்வி அமைச்சருடனும் , வெள்ளிக்கிழமைக்கு முன்பாக ஜனாதிபதியுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாக ஜனாதிபதி செயலக அதிகாரிகள் தெரிவித்தனர். பேச்சுவார்த்தைகளில் ஈடுபட நாம் தயார் என்ற போதிலும் , எமது பிரச்சினைகளுக்கான ஸ்திரமான தீர்வு வழங்கப்படும் வரை பணி பகிஷ்கரிப்பை கைவிடப்போவதில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது , ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்க கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடன் நீண்ட பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டது. இதன் போது கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தொலைபேசியூடாக கலந்துரையாடினார். எமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான சகல முயற்சிகளையும் நாம் முன்னெடுத்துள்ளோம்.

கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்கள் ஐவர் கொண்ட குழுவின் அறிக்கை காணப்படுகிறது. அதிபர் மற்றும் ஆசிரியர் தொழிற்சங்கள் தொடர்பான வழக்கு தீர்ப்பு , அமைச்சரவை பத்திரம் , அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் என்பனவும் உள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு வரும் திங்களன்று அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

அமைச்சரவை பத்திரம் தொடர்பில் செவ்வாயன்று கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிசுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு ஏற்பாடுகளை செய்வதாகவும் , அதனையடுத்து ஜனாதிபதி சம்பள ஆணைக்குழு உள்ளிட்டவற்றுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்த பின்னர் அவரை சந்திப்பதற்கும் ஏற்பாடுகளை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்ட போதிலும் இணையவழி கற்பித்தலிலிருந்து விலகியிருத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்போம் என்பதை நாம் அவர்களிடம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். பேச்சுவார்த்தைகளில் ஈடுபட நாம் தயார். ஆனால் எமது பிரச்சினைகளுக்கான ஸ்திரமான தீர்வு அவசியமாகும். அதுவரையில் எமது எதிர்ப்பு போராட்டங்களை நாம் கைவிடப் போவதில்லை.

ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பு செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் மாத்திரமே பேச்சுவார்த்தை இடம்பெற்றது. மாலைதீவு ஜனாதிபதி நாட்டுக்க வருகை தந்துள்ளதால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அமைச்சரவை பத்திரம் உள்ளிட்டவற்றில் எமக்கு நம்பிக்கை கிடையாது. நாம் எமது போராட்டங்களைக் கைவிட வேண்டுமாயின் அரசாங்கம் எமக்கான துரித தீர்வுகளை வழங்க வேண்டும்.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜாசிங்க தெரிவிக்கையில் ,

எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு (30) முன்னர் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறப்பட்டது. எவ்வாறிருப்பினும் எமது தொழிற்சங்க நடவடிக்கையால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியாது. அவ்வாறு மாணவர்கள் பாதிப்புக்களுக்கு முகங்கொடுப்பத்திலிருந்து அவர்களைப் பாதுகாப்பது நிர்வாகிகளின் கைகளிலேயே உள்ளது. எனவே இந்த பிரச்சினைகளை தொடர்ந்தும் உதாசீனம் செய்வதற்கு அதிபர்களும் ஆசிரியர்களும் இடமளிக்கப் போவதில்லை என்றார்.