(நா.தனுஜா)
உத்தேச ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புச் சட்டமூலத்தின் ஊடாக, பாதுகாப்புத்துறையை வலுப்படுத்தல் என்ற போர்வையில் பணத்தைப் பெற்றுக்கொண்டு கல்வியை வழங்கும் தனியார் பல்கலைக்கழகங்கள் உருவாவதற்கு ஒருபோதும் இடமளிக்கமுடியாது. 

எனவே இந்தச் சட்டமூலத்திற்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்களால் முன்னெடுக்கப்படும் அனைத்துப் போராட்டங்களுக்கும் எமது கொள்கைகளுக்கு ஏற்றவாறான ஆதரவை வழங்குவதற்கும் இச்சட்டமூலத்தைத் தோற்கடிப்பதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தயாராக இருப்பதாகப் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக தெரிவித்துள்ளார்.

4

அவர் மேலும் கூறியதாவது, அரசாங்கத்தினால் நேற்று இரவு வெளியிடப்பட்டிருக்கும் வர்த்தமானி அறிவித்தலின் நோக்கம், ஏற்கனவே கொண்டுவரப்பட்ட ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக சட்டமூலத்தை மாற்றியமைப்பதல்ல. மாறாக பல்கலைக்கழகம் தொடர்பான சட்டத்தை மாற்றியமைப்பதே அதன் நோக்கமாகும். அதன்படி நாட்டில் தற்போது இயங்கிவரும் பல்கலைக்கழகங்கள் மற்றும் திறந்த பல்கலைக்கழகங்கள் என்பவற்றுக்கு மேலதிகமாக விசேட சந்தர்ப்பங்களின்போது நிறுவப்படும் கட்டமைப்பையும் பல்கலைக்கழகம் என்ற வரையறையின்கீழ்க் கொண்டுவந்திருக்கின்றார்கள்.

எனவே உத்தேச ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தின் ஊடாக முன்மொழியப்பட்ட நடைமுறைகள் எவையும் அரசாங்கத்தினால் மீளப்பெற்றுக்கொள்ளப்படவில்லை. மாறாக ஏற்கனவே நடைமுறையிலிருக்கும் பல்கலைக்கழகச் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, விசேட சந்தர்ப்பங்களை முன்நிறுத்தி பல்கலைக்கழகங்களை உருவாக்கக்கூடிய வாய்ப்பு மேற்படி வர்த்தமானி அறிவித்தலின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பாதுகாப்புத்துறைசார் பல்கலைக்கழகங்கள் மற்றும் வெவ்வேறு மதரீதியான பல்கலைக்கழகங்கள் போன்றவை விசேட சந்தர்ப்பங்களாகக் கருத்திற்கொள்ளப்படுவதில் எமக்கு எவ்வித பிரச்சினைகளுமில்லை. ஆனால் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகமானது, பாதுகாப்புத்துறையுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல் பணத்தைப் பெற்றுக்கொண்டு சாதாரண மாணவர்களையும் உள்வாங்கக்கூடியநிலை காணப்படுவதுடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குப் புறம்பாக, முப்படைத்தளபதிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளின் பங்களிப்புடனான நிர்வாகசபையினால் இப்பல்கலைக்கழகத்தை நிர்வகிப்பதற்கான வாய்ப்பேற்படுத்தப்படுகின்றமை அவதானத்திற்குரிய விடயமாகும் என்று குறிப்பிட்டார்.