ஆர்.ராம்

ராஜபக்ஷவினரின் மீள் வருகையுடன் இலங்கையில் சீனாவின் ‘கை’ ஓங்கிவிட்டமை பகிரங்கமான விடயமாகின்றது. அபிவிருத்திதிட்டங்கள், உட்கட்டமைப்பு விரிவாக்கம் என்று சீனா மூலைமுடுக்கெங்கும் புகுந்துகொள்வதில் ஆர்வமாக இருக்கின்றது.

  

ஆனால், சீனாவின் இத்தகைய அதீத கரிசனையானது, இலங்கையின் வளர்ச்சியை மையப்படுத்தியது அல்ல என்பதை முழுமையாக விளங்கிக்கொள்வது காலத்தின் கட்டாயமாகின்றது. அதற்கு அண்மைக்காலமாக நிகழ்ந்து வரும் சில விடயங்களை இங்கு மீட்டிப்பார்ப்பது அவசியமாகின்றது.  பூகோளப்போட்டிக்கு அப்பால் உள்நாட்டில் நடைபெறும் விடயங்கள் அதனால் ஏற்படவுள்ள விளைவுகள் பற்றிய அதீத அக்கறை ஒவ்வொரு பிரஜைக்கும் அவசியமானதொன்றாகிறது.

  

இலங்கையின் அபிவிருத்திக்கான நிதியுதவி திட்டங்கள் சீன நிறுவனங்களால் செயல்படுத்தப்படுகின்றன. அதுமட்டுமன்றி அந்த அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் சீனாவிலிருந்து கொண்டுவரப்படும் உபகரணங்கள், இயந்திரங்கள் மற்றும் பொருட்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்றன. அதுமட்டுமன்றி உயர் அதிகாரிகளின் நிருவாகத்திலேயே அவை முன்னெடுக்கப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன.

  

இதேநேரம், சீனவினால் முன்னெடுக்கப்படும் உட்கட்டமைப்பு திட்டங்கள் மூலமாக இலங்கைக்கான சீன இறக்குமதிகளில் அதிகரிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ள அதேநேரம், சீனாவுக்கான ஏற்றுமதியையும் அவை வெகுவாகக் குறைத்துள்ளன. இதன் விளைவாக சீனாவுடனான வர்த்தக பெறுமதியில் இடைவெளிகள் அதிகரிக்கப்பட்டு அல்லது பற்றாக்குறை அதிகரிக்கப்பட்டு இலங்கை ரூபாவின் மீது கடுமையான அழுத்தங்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்றது.

  

இதேவேளை, இலங்கையில் சீனாவினால் முன்னெடுக்கப்பட்ட நிர்மானத்திட்டங்கள் அவற்றின் உரிய பலாபலன்களை அடையவில்லை. அதற்கான சிறந்த உதாரணங்களாக, தாமரை கோபுரம், அம்பாந்தோட்டை கிரிக்கெட் அரங்கம் மற்றும் அம்பாந்தோட்டை மத்தள விமான நிலையம், அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றைக் குறிப்பிட்டுக்கூறலாம்.

  

அதுமட்டுமன்றி, இந்த திட்டங்கள் குடிமக்கள் மீது எந்தவிதமான நேரடியான தாக்கங்களையும் செலுத்தவில்லை. அதாவது அவருக்கு எவ்வகையிலும் நன்மைகளை அளிப்பதாக அமைந்திருக்கவில்லை. பொருட்கள், சேவைகளுக்கான விலைகளின் அதிகரிப்பால் சதாரண மக்கள் தமது வருமானத்தினை உயர்த்துவதில் நெருக்கடிகளை எதிர்கொள்கின்றார்கள். இதற்கு எவ்விதமான பதிலீட்டையும் இந்த அபிவிருத்தி திட்டங்கள் வழங்குவதாக அமைந்திருக்கவில்லை.

கடந்த 2019 செப்டம்பரில் 104 மில்லியன் டொலர்கள் செலவில் உருவாக்கப்பட்ட தாமரை கோபுரம் மிகுந்த ஆரவாரத்துடன் திறக்கப்பட்டது. ஆனாலும் தற்போது வரையில் இதன் செயற்பாடுகள் எவையும் ஆக்கபூர்வமாக அமைந்திருக்கவில்லை. மாறாக அக்கோபுரம் சர்சைகளுக்குள் உள்ளாகியிருக்கின்றது.

  

இத்திட்டத்தினை அங்குராட்ணபம் செய்யும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த திட்டத்தினை மேற்கொண்ட சீன ஒப்பந்தக்காரர்கள் மற்றும் உள்நாட்டு முகவர்கள் ஆகியோரின் கூட்டிணைவில் 11 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாயமாகியுள்ளதாக குறிப்பிட்டார். அதன் பின்னர் அதுபற்றிய விசாரணைகள் எவையும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை.

  

அதேபோன்று, சீனாவின் எக்ஸிம் வங்கியின் கடனுதவியில் மத்தளவில் 20மில்லியன் டொலர்கள் செலவில் உருவாக்கப்பட்ட விமான நிலையம் உலகில் மிகவும் எளிதான விமான நிலையம் என்ற கௌரவத்தினைக் கொண்டிருந்தாலும் இலங்கையின் முகாமைத்துவ மூலோபய நிறுவமானது இந்த விமான நிலையத்தினை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்ததோடு கட்டுநாயக்கவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தினை விரிவாக்கம் செய்யுமாறும் பரிந்துரைத்திருந்தது.

அதேபோன்று சீனாவின் கடனுதவியினைப் பெற்று 1.4 பில்லியன் டொலர்கள் செலவில் நிர்மானிக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகமானது சிக்கலில் அகப்பட்டது. இந்த அபிவிருத்தித்திட்டத்திற்காக சீனாவிடமிருந்து பெறப்பட்ட கடனுக்கான வட்டிக் கூறுகளை திருப்பிச் செலுத்துவதற்கு கூட துறைமுகத்தால் கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லாமையின் காரணத்தினால் அந்தத் துறைமுகத்தினை சீனாவுக்கே குத்தகையின் அடிப்படையில் வழங்க வேண்டிய கட்டாயம் இலங்கைக்கு ஏற்பட்டிருந்தது. அவ்வாறு குத்தகைக்கு வழங்கப்பட்டதன் பின்னர் அங்கு இலங்கை துறைமுக அதிகார சபையின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருப்பதோடு இலங்கை கடற்படையும் சீனாவிடம் அனுமதி பெற்றே செயற்பட வேண்டிய நிலைமையொன்று ஏற்பட்டிருக்கின்றது.

  

இவ்வாறான நிலைமையில் தான் மிக அண்மையில் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணையக சட்டமூலம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இது இலங்கையின் இறையாண்மை எல்லைக்குள் சீனாவை சுயாதீனமாக செயற்படுவதற்கு முழுமையான அதிகாரத்தினை அளிப்பதாக உள்ளது. 

உள்ளுர் சட்டங்களை தவிர்ப்பதானது, நாட்டின் இறையாண்மையை மட்டுமல்ல, அதன் கலாசாரத்தையும் பண்பாட்டையும் நீண்டகாலமளவில் முழுமையாக பாதிக்கச் செய்யும் நிலைமையே காணப்படுவதாக பல்வேறு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

மேலும் இலங்கையின் அரசியலமைப்பு சட்டங்கள் இந்த துறைமுக நகரத்திற்கு பொருந்தாது என்பதோடு  துறைமுக நகர பகுதிக்குள் சீனா அதன் சொந்த நாணயத்தை வைத்திருப்பதற்கு முழுமையான அனுமதியும் கிடைக்கிறது. அவ்வாறு பார்க்கையில் சீனா வெகுவிரைவில் யுவானை அறிமுகப்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

  

இவற்றைவிடவும், தொழில்துறைகளை பாதுகாப்பதன் பெயரில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள், படைகள் மற்றும் இதர முகவர் அமைப்புக்கள் இந்தப் பகுதிக்குள் வருவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதோடு, இலங்கை மக்களின் நடமாட்டத்தினை முழுமையாக கட்டுப்படுத்தும் வகையிலேயே சட்ட ஏற்பாடுகள் காணப்படுகின்றன. குறிப்பாக, கடவுச்சீட்டைப் பயன்படுத்தி அனுமதி பெற வேண்டிய நிலைமைகளே தோன்றவுள்ளன.

  

1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் கொழும்பு துறைமுக நகரத்தை சீன அரசாங்கத்திற்குச் சொந்தமான சீனா கம்யூனிகேஷன்ஸ் கட்டுமான நிறுவனத்தின் (சி.சி.சி.சி) துணை நிறுவனமான சீனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பனி (சீ.ஹ.இ.க) நிர்மானித்து வருகின்றது. 

கடந்த ஆண்டு ஓகஸ்டில், தென் சீனக் கடலில் இராணுவ ரீதியாக மூலோபாய தீவுகளை உருவாக்க சீனா அரசாங்கத்திற்கு உதவியமைக்காக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தால் சீனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பனியின் தாய் நிறுவனமான சீனா கம்யூனிகேஷன்ஸ் கட்டுமான நிறுவனம் தடைசெய்யப்பட்ட பட்டியலில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

  

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் பெரிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்துவதற்காக சீனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பனி பேச்சுவார்த்தை நடத்தியபோது, ஒரு மூத்த அரசாங்க அதிகாரிக்கு குறித்த சீன நிறுவனம் இலஞ்சம் கொடுக்க முயன்றதாக பங்களாதேஷ் 2018 சீனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பனியை தடைசெய்யப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் இணைத்தது.

  

இவ்வாறான பின்னணியுடைய சீனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பனிக்கு இலங்கையிலும் ஊழல் மோசடிகளில் பங்கைக் கொண்டுள்ளதாக குற்றச்சாட்டுக்களைக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக 2015இல் மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதியளித்ததாக குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன. ஆனால் அவைபற்றிய உறுதிப்படுத்தல்கள் எவையும் இன்னமும் உத்தியோக பூர்வமாக வெளிவரவில்லை. ஆனாலும் சீன நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலிருந்து 1.1 மில்லியன் டொலர்கள் தொகையை தேர்தல் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக சில தனிப்பட்ட விசாரணைகள் ஊடாக தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

  

சீனத் தேவைகளுக்கு ஏற்ப இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக அரசியல் மற்றும் அதிகாரத்துவ இயந்திரத்தை சீனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பனி தனது மூலோபாயத்தால் தகர்த்துவிட்டது. குறித்த திட்டத்தின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டிற்கான உறுப்பினர்களில் ஒருவர் சீனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பனியின்ன் தாய் நிறுவனத்திற்கான ஆலோசகராகவும் இருந்துள்ளார். அதன்மூலம் குறித்த கம்பனியின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.

  

உள்ளுர் மக்களுக்காக 83,000 தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என்றும் 15 பில்லியன் டொலர்கள் வரையிலான முதலீடுகள் நாட்டிற்குள் வரும் என்றும் எதிர்வு கூறப்படுகின்றது. ஆனால் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் ஒட்டுமொத்த நன்மை குறித்து கூறப்படுவதற்கு மாறாக, கொழும்பின் வடக்கு மற்றும் தெற்கு கடற்கரையோரம் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரம் இந்த திட்டத்தின் ஆரம்பத்தினால் எற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது.

  

இந்த திட்டத்திற்காக மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான மணல் மற்றும் கிரனைட்டுக்கான ஆகியவை கொழும்பு, கம்பாஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களைப் பாதிக்கும் வகையில் குவாரி அமைக்கப்பட்டு அகழப்படுகின்றது. இந்த மூன்று மாவட்டங்களிலேயே அதிகளவான மக்கள் தொகையும் காணப்படுகின்றது.

  

ஆகவே அடுத்த கட்டமாக அந்த மாவட்டங்களின் தரைத்தோற்றம் பாதிக்கபடும் நிலைமைகள் ஏற்டுபடுகின்றன. மேலும் சீன உட்;கட்டமைப்பு திட்டங்கள் உள்நாட்டின் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டதாக இல்லை. அதுமட்டுமன்றி சீனாவின் திட்டங்கள் அண்மைய காலத்தில் சமூக தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன. குறிப்பாக வேலைவாய்ப்பு விடயத்தில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது.

  

உதாரணமாக கூறுவதாயின், துறைமுக நகர அபிவிருத்தி திட்டத்தில் 22 சதவீத சீன தொழிலாளர்கள் ஈடுபட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சீன கட்டுமான தொழிலாளிக்கு ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கப்படுகிறது, ஆனால் இலங்கை தொழிலாளி ஒருவருக்கு ஆயிரத்து ஐந்நூறு ரூபா செலுத்தப்பட வேண்டும். ஆகவே இந்தக் கொடுப்பனவை வைத்து ஒப்பீடு செய்யும்போது சீன தொழிலாளி குறைந்த பெறுமதியில நீண்டகாலம் பணியாற்றுவார் என்றே மதிப்படப்படுகின்றது.

  

அதுமட்டுமன்றி எட்டுமணி நேரத்திற்கும் அதிகமாக பணியாற்றுவதற்கு சீன தொழிலாளி தயாராகவே உள்ளார். அதனடிப்படையில் இலங்கையில் சீன தொழிலாளர்களுக்கான கேள்வியை அதிகரிக்கும் மறைமுகச் செயற்பாடொன்று முன்னெடுக்கப்படுகின்றது. அதேநேரம், இலங்கையில் தற்பேதுவரையில் 15,000 சீனத் தொழிலாளர்கள் இருப்பதாக உத்தியோகபூர்வ மதிப்பீடுகள் கூறுகையில், 100,000க்கும் அண்மித்த எண்ணிக்கையில் சீனத் தொழிலாளர்கள் இருப்பதாக சில உத்தியோக பூர்வமற்ற தகவல்கள் வெளிப்படுத்துகின்றன.

  

சீனா தமது அபிவிருத்தி திட்டங்கள் மூலமாக உள்ளுர் தொழிலாளர்களின் திறமை மற்றும் அறிவு பரிமாற்றப்படுகின்றது என்று வெளிப்படையில் கூறினாலும் அவ்விதமான எவ்விதமான பரிமாற்றங்களும் இடம்பெறுவதில்லை. உள்ளுர் தொழிலாளர் சந்தையில் சீன தொழிலாளர்களின் வருகையால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் பற்றிய ஆய்வில் சீனப் புத்தாண்டுக்காக வீட்டிற்குச் சென்றிருந்த சீனத் தொழிலாளர்கள் கொரோனா நெருக்கடியால் திரும்பி வரமுடியாத நிலையில் பெரும்பாலான பெரிய திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

  

இலங்கை மீனவர்களும் சீன சட்டவிரோத பதிவு செய்யப்படாத மற்றும் முறைப்படுத்தப்படாத மீன்பிடிக் கப்பல்களால் வேட்டையாடப்படுகின்றனர். இந்த விடயங்கள் பகிரங்கப்படுத்தப்படாது விட்டாலும் சமீபத்தில், சீன மீன்பிடிக் கப்பல்கள் கொழும்பின் கடற்பிராந்தியத்திற்கு சற்று வெளியே செயல்பட்டுக்கொண்டிருப்பது கண்டறியப்பட்டது, ஆனால் அரசாங்க அதிகாரிகள், சீனர்களை எதிர்கொள்ள முடியாமல், அந்த கப்பல்களை தொழில்நுட்ப ரீதியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற கூற்றை ஏற்று அதற்கான அனுமதியை வழங்கியுள்ளனர்.

  

சீனாவும் இலங்கை பிராந்தியத்தில் தனது கலாசார மேலாதிக்கத்தை விரிவுபடுத்துகிறது. அதற்காக சீன நிறுவனங்கள் உள்நாட்டு வணிக செயற்பாடுகளில் ஈடுபடும் போது கையொப்பங்கள் உள்ளிட்ட விடயங்களில் மண்டரின் மொழி பயன்படுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி அண்மையில்  கொழும்பு துறைமுக நகரத்தில் உருவாகி வரும் ‘சென்ட்ரல் பார்க்கில்’ சிங்களம், ஆங்கிலம் மற்றும் மாண்டரின் மொழிகளில் விளம்பரப்பலகை அமைக்கப்பட்டிருந்தது. எனினும், இது தற்போது அகற்றப்பட்டிருக்கின்றது.

  

இதனைவிடவும், இலங்கைக்கு விஜயம் செய்யும் சீனப் பிரஜைகள் அங்கீகாரம் பெறாத முறையில் வியாபாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சுற்றுலாப்பயணிகளை இலக்காக வைத்து சுற்றுலாத்தளங்களில் இவ்விதமாக செயற்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு கடந்த ஆட்சிக்காலத்தில் பேசுபொருளாகியிருந்தது. எனினும் அது பின்னாளில் கவனத்தில்  கொள்ளப்பட்டிருக்கவில்லை. குறிப்பாக நிலாவெளிப் பகுதியில் சீனர்களின் இவ்விதமான செயற்பாடுகள் அதிகமாக உள்ளதாக தகவல்கள் உள்ளன.

இவ்வாறு இருக்கையில் இறுதியாக, திஸ்ஸமஹாராமவில் உள்ள வரலாற்றுப்பழைமை வாய்ந்த குளத்தினை அகழ்வாராய்ச்சி செய்யும் பணிகளை சீனா முறையற்ற அனுமதியுடன் முன்னெடுத்திருந்தது. அதுவொருபுறமிருக்க, அகழ்வுப்பணிகளில் ஈடுபட்டவர்கள் சீன இராணுவச் சீருடையை அணிந்திருந்தமையால் பெரும் சர்ச்சை வெளிக்கிளம்பியது. இலங்கைச் சட்டத்தில் அவ்விதமாக செயற்பட இடமில்லை என்பது பாதுகாப்புச் செயலாளரால் சுட்டிக்காட்டப்பட்டது.

  

முதலில் சீருடை விவகாரத்தினை முழுமையாக எதிர்த்த சீனா பின்னர் அமைதிகாத்தது. தற்போது திஸ்ஸமஹாராம குளத்தை தூர்வாரும் பணிகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தச் செயற்பாடு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அப்படியென்றால் முறையற்ற வகையில் அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ள அனுமதி அளித்தது யார், அதில் ஈடுபட்டவர்கள் யார் என்ற கேள்விகள் எல்லாம் தொடராக எழுகின்றன.

  

எதுஎவ்வாறாயினும் சீனா இலங்கை மீது அகலக்கால் பதித்து விட்டது. இது பூகோள அரசியலையும் கடந்து உள்நாட்டு பாரம்பரியத்திலும் வாழ்வாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தப்போகின்றது என்ற புரிதல் தான் முதலில் ஏற்பட வேண்டியிருக்கின்றது.