கப்பம் பெற்ற இராணுவ சிப்பாய்கள் கைது

By Vishnu

22 Jul, 2021 | 11:57 AM
image

(எம்.மனோசித்ரா)

போதைப்பொருள் வியாபாரத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டுமெனில் தமக்கு பணம் வழங்க வேண்டும் என்று நபர்கள் இருவரிடம் பணம் கோரிய 3 இராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் துரித விசாரணைகளை முன்னெடுத்து குறித்த சிப்பாய்களை இராணுவத்திலிருந்து விலக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பணிப்புரை விடுத்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர்  தெரிவித்தார்.

நேற்று சிலாபம் நகரத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாக தெரிவித்து பெண்னொருவரிடம் சென்ற இருவர் , போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாயின் தமக்கு 15,000 ரூபா பணம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 

பணத்தைப் பெற்றுக் கொள்ள தாம் பின்னர் வருகை தருவதாகவும் அவர்கள் குறித்த பெண்ணிடம் கூறிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட பெண்னால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் 15,000 ரூபா பணத்தைப் பெற்றுக் கொள்ள வருகை தந்த குறித்த இரு நபர்களும் பணத்தைப் பெற்றுக் கொண்ட சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் இராணுவ சிப்பாய்கள் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேபோன்ற கடந்த செவ்வாய்கிழமை சீதுவ பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக தெரிவித்து நபரொருவரின் வீட்டிற்குள் சென்ற ஒருவர் 80,000 ரூபா பணத்தைக் கோரியுள்ளார். 

போதைப்பொருள் வியாபாரத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறியே இவ்வாறு குறித்த நபரால் பணம் கோரப்பட்டுள்ளது.

எனினும் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நீர்கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினரால் பணத்தைக் கோரிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த நபரும் இராணுவ சிப்பாய் என்பது தெரியவந்துள்ளது. 

இவ்வாறு கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய்கள் தொடர்பில் சிலாபம் மற்றும் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right