இயக்குனரும், நடிகருமான புதியவன் இராசையா இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'ஒற்றைப் பனை மரம்' விரைவில் டிஜிட்டல் தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

'மண்' படத்தை இயக்கிய இயக்குனர் புதியவன் இராசய்யா இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'ஒற்றைப் பனை மரம்'. எம்முடைய மண்ணில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தில் புதியவன் இராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, மாணிக்கம் ஜெகன், தனுவன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மஹிந்த அபேசிங்க ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஷ்வமித்ரா இசையமைத்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குனர் பேசுகையில், ' இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடையும் தருவாயில் படத்தின் திரைக்கதை தொடங்குகிறது. சமகால சூழலில் முன்னாள் போராளிகளும், மக்களும் எதிர்கொண்டிருக்கும் எளிதில் பகிர்ந்து கொள்ள இயலாத விடயத்தை மையமாகக்கொண்டு இந்த திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச பட விழாக்களில் பங்குபற்றிய இந்த திரைப்படம், 'சிறந்த நடிகர்', 'சிறந்த ஒளிப்பதிவு', 'சிறந்த இசை' என 15க்கும் மேற்பட்ட விருதுகளையும் வென்றிருக்கிறது. இப்படத்தை பிரபலமான தனியார் தனியார் டிஜிட்டல் தளங்களில் வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.' என்றார்.

இந்த திரைப்படத்தை ஆர். எஸ். எஸ். எஸ். பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் எஸ். தணிகைவேல் தயாரித்திருக்கிறார். சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு பற்றி விருதுகளை வென்ற படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் எப்போதும் வரவேற்பு அளிப்பார்கள். அந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கும் 'ஒற்றைப் பனை மரம்' விரைவில் திரைக்கு வர இருப்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.