(எம்.மனோசித்ரா)
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் வேலைக்கமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்குள்ளான நிலையில் உயிரிழந்த டயகம பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியின் தாய் , சகோதரன், சகோதரி மற்றும் சித்தப்பா ஆகியோரிடம் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்ட இரு விசேட பொலிஸ் குழுக்களால் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது குறித்து பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில் ,

முன்னாள் அமைச்சர்  ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் பணிபுரிந்த தீக்காயங்களுக்குள்ளான நிலையில் கடந்த 3 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி 16 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நேற்று புதன்கிழமை கொழும்பு தெற்கு குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் பிரிவிற்கு பொறுப்பான அதிகாரிகள் ஆகியோர் இரு குழுக்களாக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். குறிப்பாக நேற்று டயகம பிரதேசத்தில் குறித்த சிறுமியின் தாய், சித்தப்பா, சகோதரன் மற்றும் சகோதரி ஆகியோரது வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

இவர்கள் தவிர குறித்த சிறுமியை முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இல்லத்திற்கு அழைத்துச் செல்வதற்கு முன்னர் மேலும் இரு பெண்கள் வீட்டு வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அந்த இரு பெண்களதும் வாக்குமூலமும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் 21 வயதுடைய யுவதி என்பதோடு மற்றைய பெண் 32 வயதுடையவராவார்.

இவர்கள் இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்து நீண்ட வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. குறித்த வாக்குமூலத்திற்கு அமைய தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அத்தோடு சிறுமியின் மரணம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் மேற்கூறப்பட்ட இரு பொலிஸ் குழுக்கள் தவிர பொரளை பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கொழும்பு தெற்கு குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் பிரிவிற்கு பொறுப்பான அதிகாரிகள் குழு தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன என்றார்.