கொவிட்-19 ஆபத்துகள் இருந்தபோதிலும், புராதன பழக்கவழக்கங்களை மதித்து, சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலுக்கு அமைவாக கண்டி எசல பெரஹராவை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, பெரஹராவில் பங்கேற்கும் அனைத்து கலைஞர்களும் உயிர் பாதுகாப்பு குமிழியல் உட்படுத்தப்படுவார்கள் என்றும், பெரஹராவின் செயல்பாடுகள் தொடர்பான மேலதிக முடிவுகள் சுகாதார ஆலோசனையின் அடிப்படையில் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பெரஹரா நிகழ்வுகளில் பங்கெடுக்கும் அனைத்து கலைஞர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் எசல பெரஹராவை  நேரடியாக பார்வையிடுவதற்கு பொது மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

மத்திய மாகாண சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, நாட்டில் நிலவும் நிலைமையைக் கருத்தில் கொண்டு கண்டி எசல பெரஹராவை நேடியாக பார்வையிடுவதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்பளிக்காமல் இருப்பது நல்லது என்றும் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.

பெரஹராவில் காப்பு கட்டும் நிகழ்வு ஆகஸ்ட் 09, கும்பல் பெரஹரா ஊர்வலம் ஆகஸ்ட் 13, ரந்தோலி ஊர்வலம் ஆகஸ்ட் 22, இறுதியாக ‘தியா கெப்பீம’ எனப்படும் நிகழ்வுடன் பெரஹரா நிகழ்வுகள் ஆகஸ்ட் 23 ஆம் திகதி முடிவடையும்.