கொரோனா வைரஸில் டெல்டா வகை வைரஸ், டெல்டா பிளஸ் என்று உருமாற்றம் நிகழ்ந்துள்ளதாலும், அவை மேலும் உருமாற்றம் பெற்று  மூன்றாவது அலையில் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என சுகாதாரத்துறையினரால் எதிர்பார்க்கப்படுகிறது. 

கொரோனாவின்  மூன்றாவது அலை ஏற்படுவது உறுதி என்றும், அதனுடைய வீரியமும், பரவலும் எந்த அளவில் இருக்கும் என்று துல்லியமாக அவதானிக்க இயலாததால், இரண்டு தடவை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்குமா? என்றும், மேலும் கூடுதலாக பூஸ்டர் தடுப்பூசியைச்  செலுத்த வேண்டுமா? என்பது குறித்த ஆய்வும் தற்போது நடைபெற்று வருவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

பொதுவாக வைரஸில் உருமாற்றம் நடைபெறுவது இயல்பு என்றாலும், கொரோனா வைரஸில் நடக்கும் உருமாற்றம் ஆர். என். ஏ வகை வைரஸ் என்பதாலும், உருமாற்றம் விரைவாக பெற்று வீரியத்துடனும், அதிக வேகத்தில் பரவும் தன்மையுடன் இருப்பதாலும் இது தொடர்பான அச்சம் ஏற்படுகிறது. இந்நிலையில் தடுப்பூசிகள், உருமாற்றம் பெற்ற கொரோனாவை கட்டுப்படுத்தும் வீரியத்தை பெற்றிருக்கிறது. 

இருப்பினும் தென்னாப்பிரிக்க உருமாற்ற வைரஸிற்கு எதிராக, அதனை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசிகள் செயல்படவில்லை என்றும் சில ஆய்வு முடிவுகள் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படுமோ? என்ற அச்சத்தை விட, இத்தகைய பாதிப்பால் உயிருக்கு ஆபத்து ஏற்படுமோ? என்ற அச்சம்தான் அனைவரிடத்திலும் இருக்கிறது. 

கொரோனாத் தொற்று பாதிப்பிலிருந்து அனைத்து வகையான தடுப்பூசிகளும் 70 சதவீதம் அளவிற்கு பாதுகாப்பை அளிக்கிறது என்றும், உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் 90 சதவீதம் வரை பாதுகாப்பை தருகிறது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே டெல்டா பிளஸ் போன்ற உருமாற்றம் பெற்ற வைரஸ், மூன்றாவது அலையாக ஏற்பட்டாலும், இரண்டு தடவை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படாது என்று மருத்து நிபுணர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள். இருப்பினும் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து பாதுகாப்பு கிடைக்க, இரண்டு தடவை தடுப்பூசி செலுத்தி கொள்வது தான் சிறந்தது என்றும், இவை தான் எம்மை மூன்றாவது அலையிலிருந்து தற்காத்துக்கொள்ளும் சரியான மருத்துவ அணுகுமுறை என்றும் மருத்து நிபுணர்கள் விளக்கமாகத் தெரிவிக்கிறார்கள். 

டொக்டர் சுப்ரமணியம்

தொகுப்பு அனுஷா.