(எம்.மனோசித்ரா)
தெமட்டகொட புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரத பெட்டிகள் மற்றும்  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் பொறுத்தப்பட்டிருந்த காற்று சீரமைக்கும் இயந்திரங்கள் என்பவற்றிலுள்ள செப்பு கம்பி தொகுதிகளை கொள்ளையிட்ட இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

தெமட்டகொடையிலுள்ள புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரத பெட்களிலிருந்து சுமார் 3 இலட்சம் பெறுமதியுடைய செப்பு கம்பிகள் மற்றும் மின் கம்பிகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெமட்டகொடை பொலிஸ்நிலையத்தில் அளிக்கப்பட்டிருந்த முறைப்பாடுகளுக்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பேஸ்லைன் வீதியை வசிப்பிடமாகக் கொண்ட 62 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபருக்கு எதிராக அரச சொத்துக்களை கொள்ளையிட்டமை மற்றும் அநாவசியமாக புகையிரத பெட்டிக்குள் நுழைந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. குறித்த சந்தேகநபரால் கொள்ளையிடப்பட்ட பொருட்களில் ஒரு தொகுதி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.