(நா.தனுஜா)
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்டிருந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உரியவாறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். என்பதில் எமக்கு எவ்வித மாற்றுக்கருத்துக்களும் இல்லை. ஆனால் இச்சம்பவம் ஓர் அரசியல் விவகாரமல்ல. ரிஷாத் பதியுதீன் எமது தரப்பைச் சேர்ந்தவர் என்பதால் இதனை அரசியல் ரீதியான பிரச்சினையாக்கி, அதன்மூலம் எதிர்க்கட்சியாக எம்மீது சேறுபூசுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை அரசாங்கத்தின் அத்தகைய முயற்சியைக் கண்டிக்கும் வகையிலேயே பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டதாகத் தெரிவித்துள்ள அவர், மாறாக விமல் வீரவன்ச வீட்டில் இடம்பெற்ற சம்பவத்தில் குற்றவாளிகள் பாதுகாக்கப்பட்டதைப்போன்று இவ்விவகாரத்திலும் குற்றவாளிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று பொருள்படும் வகையில் எதனையும் கூறவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைக்கமர்த்தப்பட்டிருந்த டயகமவைச் சேர்ந்த 15 வயதான சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நேற்று பாராளுமன்றத்தில் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கும் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது.

இதன்போது கருத்து வெளியிட்ட முஜிபுர் ரஹ்மான், 'ரிஷாட் பதியுதீனின் வீட்டில் உயிரிழந்த சிறுமி தொடர்பில் ஆளுந்தரப்பினர் பேசுகின்றனர். இச்சம்பவம் தொடர்பான உண்மைகளைக் கண்டறிந்து தண்டிக்கவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கே காணப்படுகின்றது. ஆனால் விமல் வீரவன்சவின் வீட்டில் சிறுவனொருவன் உயிரிழந்தபோது, அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே அதிலிருந்து விமல் வீரவன்சவைப் பாதுகாத்தார். இவ்வாறு வீடுகளில் இளைஞர்களைக் கொன்றவர்கள் இப்போது ரிஷாட் குறித்துப் பேசுகின்றார்கள்' என்று குறிப்பிட்டார்.

முஜிபுர் ரஹ்மானின் மேற்படி கருத்துத்தொடர்பில் சமூகவலைத்தளங்களில், குறிப்பாக டுவிட்டர் பக்கத்தில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. விமல் வீரவன்சவின் வீட்டில் இடம்பெற்ற சம்பவத்திலிருந்து விமல் வீரவன்ச பாதுகாக்கப்பட்டதைப்போன்று, ரிஷாத் பதியுதீனையும் பாதுகாக்கவேண்டும் என்று அவர் கூறமுற்படுகின்றாரா? என்று பலரால் கேள்வி எழுப்பப்பட்டிருந்ததுடன் அதற்குக் கண்டனங்களும் வெளியிடப்பட்டிருந்தன.